முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-


எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிர்வாகத்தை எந்தெந்த வகையில் முடக்க முடியுமோ, அதற்கு முழுமையாக கவர்னர்களை தூண்டி விட்டு மத்திய அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாநிலங்களின் கூட்டாட்சி தத்துவம் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மாநிலங்கள் இணைந்த மத்திய அரசு என்றும், இந்தியா ஒரு ஜனநாயக கூட்டமைப்பு கொண்ட நாடு என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் மோடி அரசு வந்த பிறகு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களை உதாசீனப்படுத்தி அரசியல் ரீதியாக விமர்சித்து தரம் தாழ்ந்த வேலையை செய்து வருகிறார். அதன் வெளிப்பாடாக தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக காட்டமான அறிக்கையை கொடுத்துள்ளார்.


ஜனநாயகம், இந்திய அரசியல் அமைப்பு, நிதி கமிஷன் அடிப்படையில் மாநிலங்கள் செயல்பட வேண்டும். மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக் கொண்டு மாநிலங்களை டம்மியாக்கும் வேலையை பிரதமர் மோடி செய்து வருகிறார். எனவே தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கோஷத்தை போடுகிறார். இது மிகப்பெரிய ஆபத்தை நாட்டில் உருவாக்கும். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிர்பாக அமையும். மாநிலங்கள் மத்திய அரசை எதிர்த்து போராடும் நிலை உருவாகும். இதற்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கு எதிர்கட்சி மாநில முதலமைச்சரகள் ஒன்றிணைந்துள்ளனர்.


புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தி திணிப்பை நாம் எதிர்த்து வருகிறோம். ஆனால் புதுவையில் மத்திய அரசு இந்தியை திணிப்பதை மாநில அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. புதுவையில் தற்போது நடைபெற்று வரும் கண்காட்சியில் கூட இந்தி தலை தூக்கி நிற்கிறது. இது தேவையா? இது கூட தெரியாமல் முதலமைச்சர் ரங்கசாமி பா.ஜ.க. கூட்டணியில் தலையாட்டி பொம்மையாக செயல்படுகிறார். புதுவையில் இந்தி திணிப்பை முதலமைச்சர் ரங்கசாமி தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அதனை எதிர்த்து போராடுவோம்.




முதலமைச்சர் ரங்கசாமி சட்டமன்றத்தில் அறிவித்த 16 அறிவிப்புகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. பொங்கல் பரிசு இன்னும் வழங்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு அறிவித்த அரிசி இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது மத்திய அமைச்சர்கள் அடிக்கடி புதுவைக்கு வருகின்றனர். அவர்கள் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்ட செல்ல நடவடிக்கை எடுப்போம் என்று கூறுகின்றனர். ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை. கடந்த 2011 முதல் 5 ஆண்டுகள் மத்திய பா.ஜ.க. கூட்டணியில் முதலமைச்சர் ரங்கசாமி இருந்தார். ஆனால் அவரால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வரமுடியவில்லை. அதனை நாங்கள் கொண்டு வந்தோம்.


முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி சென்ற பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது. 7 நீர் நிலை தொட்டிகள் பாதியிலேயே விடப்பட்டது. இவைகள் எல்லாம் முடித்து அதனை நடைமுறைப்படுத்தியது காங்கிரஸ் அரசின் சாதனை. இதனை மாநில அரசின் நிதியில் இருந்து செய்தோம். மத்திய அரசு எந்த நிதியும் கொடுக்கவில்லை. ரங்கசாமி அடிக்கல் நாட்டும் முதலமைச்சரே தவிர திட்டங்களை செயல்படுத்தும் முதலமைச்சர் இல்லை.


நான் முதலமைச்சர் ரங்கசாமிக்கு சாவல் விடுகிறேன். 9 மாத ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து கொண்டு வர முடிந்ததா? புதுவையில் புதிய சட்டசபை கட்ட ரூ.300 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று சபாநாயகர் கூறினார். அது என்ன ஆனது என்று தெரியவில்லை. புதுவை அரசு கொடுத்த எந்த ஒரு கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்கவில்லை. பிரதமர் மோடி தொடர்ந்து புதுவையை புறக்கணித்து வருகிறார். முதலமைச்சர் ரங்கசாமி வாய் மூடி மவுனமாக உள்ளார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.