இந்தியாவின் பிரபலமான பாடகிகளில் ஒருவர் லதா மங்கேஷ்கர். லதா ஜி என அழைக்கப்படும் இவருக்கு நாடு முழுவதும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தமிழில் வலையோசை கலகலவென உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
இந்தியாவின் நைட்டிங்கேல், இந்தியாவின் வாய்ஸ், இந்திய சினிமாவின் சிறந்த பாடகர்களில் ஒருவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான லதா மங்கேஷ்கர், 1942ஆம் ஆண்டு தனது 13ஆவது வயதில் தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.
இந்திய மொழிகள் பலவற்றிலும் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் பத்ம பூஷண், பாரத் ரத்னா, தாதா சாகேப் பால்கே என இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது மும்பையில் வசித்துவருகிறார். இந்தச் சூழலில் லதா மங்கேஷ்கருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் என பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 92 வயதான லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் திடீர் திடீரென மாற்றம் ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக, லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து பேசிய மருத்துவர்கள், “லதா ஜி இன்னும் ஐசியுவில் இருக்கிறார், அவர் விரைவில் குணமடைவதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். அவள் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” என கூறியிருந்தனர்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கர் கடந்த இரண்டு நாட்களாக திட உணவை உட்கொள்ள ஆரம்பித்து முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரிடம் கேட்கப்படும் விஷயங்களுக்கு பதிலளிக்கிறார். அவர் வென்ட்டிலேட்டரில் இல்லை என மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Rajinikanth | ஒரு அவித்த முட்டை கேட்ட ரஜினி... அவமானப்படுத்திய சர்வர்... 17 ஆண்டுகளுக்குப் பின் திருப்பிக் கொடுத்த மாஸ் சம்பவம்!