இன்று பிரபலங்களாக இருப்பவர்கள்; அவர்களின் தொடக்கத்தில் பல அவமானங்களை கடந்து வந்தவர்கள். இன்னும் சொல்ல வேண்டுமானால், அவர்கள் கடந்து வந்த பாதையே அவமானங்களால் கட்டமைக்கப்பட்டதாகவே இருக்கும். அதிலும் சினிமாத்துறையில், சொல்லவே வேண்டாம். இன்று உச்சநட்சத்திரமாக, தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் வாங்கும் சம்பளம் கூட, கால்குலேட்டரில் இடம் பெறாது என்பார்கள். 100 கோடி, 150 கோடி என ஆருடம் சொல்பவர்களும் உண்டு.
இன்று அவர் நினைத்தால், எதையும் வாங்கலாம். எப்போதும் வாங்கலாம். ஆனால், அவர் ஒரு கோழி முட்டைக்கு அவமானப்பட்ட கதை தெரியுமா? 16 வயதினிலே படம் அனைவருக்கும் தெரியும். கமல் ஹீரோ, பாரதிராஜா இயக்குனர், ஸ்ரீதேவி ஹீரோயின், இசை இளையராஜா. இதை கடந்து துணை கதாபாத்திரத்தில் பரட்டை என்கிற கேரக்டரில் ரஜினியும் நடத்திருப்பார். இதுவரை அனைவரும் அறிந்ததே.
16 வயதினிலேயே சூட்டிங் அப்போது, 4 வகையான உணவு வருமாம். முதல் தரம் கமலுக்கானது, இரண்டாவது தரம் இயக்குனர் பாரதிராஜாவுக்கானது, மூன்றாவது தரம் ஸ்ரீதேவி உடையது. மற்றவர்களுக்கு 4வது தர சாப்பாடு. தரம் என்பது, உணவு வகைகளை பொருத்தது. ரஜினி தினமும் சூட்டிங் வருவாராம்; தொடர்ந்து 10 நாட்கள் அவருக்கு காட்சியே தரவில்லையாம். உண்மையில் அப்போது ரஜினியின் நிலையும் அது தான்.
மற்றவர்களை போல அவரை அழைத்து வர அங்கு காரெல்லாம் வராது. அவராக எதையாவது பிடித்து சூட்டிங் ஸ்பாட் வந்து சேர வேண்டும். இதையெல்லாம் கடந்து மதியம் ஒருநாள் உணவுக்காக புரொடக்ஷனில் அமர்ந்துள்ளார். அவருடன் மேலும் பல துணை நடிகர்களும் அமர்ந்திருந்திருக்கிறார்கள். அப்போது அசைவ உணவு கொண்டு வந்ததை அறிந்த ரஜினி, பரிமாறுபவர்களிடம், ‛முட்டை இருந்தா தாங்க...’ என்று கேட்டுள்ளார்.
‛இப்போ தான் கோழி அடைப்பு எடுத்திருக்கிறது...’ என கிண்டலாக பதிலளித்து, மறுத்து கடந்திருக்கிறார் அங்கு பரிமாறிய நபர். ரஜினி கேட்ட ஒரு முட்டையை அவர் தர மறுத்திருக்கிறார். காலங்கள் கடந்தது. ரஜினி... பெரிய ஹீரோ என்பதை கடந்து, சூப்பர் ஸ்டாராக நிற்கிறார். இப்போது வீரா படத்தில் சூட்டின். 16 வயதினிலே படத்தில் பணியாற்றிய அதே பரிமாறிய நபர், முதல் தர உணவை ரஜினிக்கு பரிமாறியுள்ளார். அந்த நபரை அடையாளம் கண்ட ரஜினி, ‛முட்டை இருக்கிறதா...’ என்று கேட்டுள்ளார். அந்த நபரோ... ‛இதோ... இப்போ கொண்டு வர்றேன்...’ என ஓட முயற்சித்துள்ளார்.
உடனே அவரை அழைத்த ரஜினி, ‛கோழிக்கு இப்போ அடைப்பு எடுக்கலையா...’ என கிண்டலடிக்க, எதிரில் இருந்த நபருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. ரஜினி பழசை மறக்கவும் இல்லை; அதை மறக்காததால் தான் முன்னேறவும் முடிந்தது. சமீபத்தில் நடந்த பட்டிமன்றம் ஒன்றில், காமெடி பேச்சாளம் மதுரை முத்து இதை நினைவு கூர்ந்தார்.
ரஜினியில் உழைப்பு மற்றும் அவரது விடாமுயற்சியை பாராட்டிய மதுரை முத்து, 72 வயதில் 400 கோடி ரூபாய் பட்ஜெட் படங்களில் ஹீரோவாக இன்றும் ரஜினி இருப்பது, அவர் புகழுக்கு கிடைத்த பெருமை என்றும் அந்த பட்டிமன்றத்தில் மதுரை முத்து பேசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்