இந்தியாவின் மிகவும் முக்கியமான ஏவுகணைகளில் ஒன்று பிரம்மோஸ் ஏவுகணை. இந்த ஏவுகணையை இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பு இணைந்து தயாரித்து வருகின்றன. இதன்காரணமாக இந்த ஏவுகணைக்கு பிரம்மபுத்ரா மற்றும் மாஸ்கோவா நதிகளின் பெயரை குறிக்கும் வகையில் பிரம்மோஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை நிலம், நீர் மற்றும் ஆகாயம் ஆகிய மூன்று தளங்களிலும் பயன்படுத்த முடியும். இந்த ஏவுகணையை ஒரு முறை ஏவிய பிறகு நாம் அதை கட்டுப்படுத்த தேவையில்லை. அதற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சரியாக சென்றடையும் திறனை இது பெற்றுள்ளது. இது ஒலியின் வேகத்தைவிட 3 மடங்கு அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணைக்கு இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் திடமான உந்துவிசையும், இரண்டாம் நிலையில் திரவ வடிவ உந்துவிசையும் உள்ளன. இரண்டாம் நிலையில் இது காற்றில் உள்ள ஆக்சிஜனை திரவமாக பயன்படுத்தி கொண்டு செயல்படும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையில் அடிக்கடி டிஆர்டிஓ சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்து வருகிறது.அந்தவகையில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ருயிஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடலில் ஏவப்படும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று ஓடிசாவின் பாலசோரிலுள்ள கடற்கரை பகுதியில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் புதிய வடிவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் சில முக்கியமான தொழில்நுட்ப மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஆர்டிஓவின் ஏவுகணை தயாரிப்பில் இது மேலும் ஒரு மையில் கல்லாக அமைந்துள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் நாடு வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. கடந்த வாரம் இந்த தகவலை பிலிப்பைன்ஸ் அரசு உறுதி செய்திருந்தது. இதற்காக பிலிப்பைன்ஸ் அரசு 374.96 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அறிவித்திருந்தது. பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க இருக்கும் முதல் நாடு பிலிப்பைன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: 17 வயது இந்திய சிறுவனை கடத்திய சீன ராணுவம்? அருணாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்..!