உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இந்தியில் வழக்கை வாதிட்ட மனுதாரரிடம், இந்த நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் என்று நீதிமன்றம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உச்சநீதிமன்ற அலுவல் மொழி


உச்சநீதிமன்றத்தின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். ஆங்கிலத்திலேயே அங்குள்ள வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் பேசிக்கொள்வார்கள். நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் அவர்கள் பேசுவது பதிவாகும். எனவே அங்கு ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியும் அலுவல் மொழி கிடையாது. பல நீதிமன்றங்களில் தனக்கான நீதியை கேட்டு அலைந்து எங்கும் கிடைக்காததால் மேல்முறையீடு செய்து உச்ச நீதிமன்றம் வந்துள்ளார் ஒரு முதியவர்.


பெரிதாக படிக்காத அவர் ஆங்கிலம் தெரியாததாலும், ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று தெரியாததாலும், இந்தியில் பேசியுள்ளார். அங்கிருந்த நீதிபதிகளுக்கு இந்தி தெரியாததால் அவர் பேசுவதை புரிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளனர். நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுதாரர் சங்கர் லால் ஷர்மா என்ற முதியவருக்கு, நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதைக் கண்டறிந்த பின்னர், அவருக்கு சட்ட உதவி ஆலோசனை வழங்கினர். அவரது வழக்கு அழைக்கப்பட்டவுடன், சர்மா இந்தியில் வாதிடத் தொடங்கியதால் நீதிபதிகள் குழப்பமடைந்ததாக கூறப்படுகிறது.


எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை


அவரது வழக்கு உச்ச நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்களுக்குச் சென்றது, ஆனால் தனக்கு எங்கும் நிவாரணம் கிடைக்கவில்லை என்று கூறினார். "நாங்கள் வழக்கு சம்மந்தப்பட்ட கோப்புகளை படித்தோம். இது மிகவும் சிக்கலான விஷயம், ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று நீதிபதி ஜோசப் சர்மாவிடம் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: BCCI: இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு கூண்டோடு நீக்கம் - பி.சி.சி.ஐ. அதிரடி...! என்ன காரணம்..?


நீதிமன்ற மொழி ஆங்கிலம்


"இந்த நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம். நீங்கள் விரும்பினால், உங்கள் வழக்கை வாதாடும் ஒரு வழக்கறிஞரை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்" என்று நீதிபதி கூறினார். மற்றொரு நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மாதவி திவான், சர்மாவின் உதவிக்கு விரைந்து வந்து பெஞ்ச் சொல்வதை அவருக்கு மொழிபெயர்த்தார்.



சட்ட உதவி வழக்கறிஞர்


சர்மாவுடன் பேசிய பிறகு, மாதவி திவான், மனுதாரர் தனது வழக்கை வாதிடக்கூடிய ஒரு சட்ட உதவி வழக்கறிஞர் வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராக இருப்பதாக கூறினார். சர்மாவுக்குப் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு வழக்கறிஞரிடம், அவர் மனுதாரருக்கு உதவ முடியுமா? என்று பெஞ்ச் கேட்டது. அதற்கு அவர் ஒப்புக்கொண்ட பிறகு, பெஞ்ச் வழக்கறிஞரிடம், "இதனை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்று நம்புகிறோம்," என்றனர். அதற்கு வழக்கறிஞரும் உத்தரவாதம் அளித்தார். வழக்கை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த பெஞ்ச், வழக்கை விசாரிக்குமாறு வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டது.