ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலககோப்பை டி20 தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடினாலும், அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. இந்திய அணி தோல்வி அடைந்ததை காட்டிலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல் தோற்றது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






இந்திய அணியின் டி20 மறுகட்டமைக்கப்படுகிறது என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக்குழுவை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் ஷர்மா தலைமையில் செயல்பட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர். உலககோப்பை கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்வியே இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


மேலும், இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தேசிய தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.






மொத்தம் 5 பேர் கொண்ட தேர்வுக்குழுவில் உறுப்பினராவதற்கு இந்திய அணிக்காக குறைந்தது 7 டெஸ்ட் போட்டிகளோ அல்லது 30 முதல்தர போட்டிகளோ அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல் தர போட்டிகளோ ஆடியிருக்க வேண்டும். மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 வருடம் ஆகியிருக்க வேண்டும்.


விருப்பமுள்ள வீரர்கள் இதற்கான விண்ணப்பங்களை வரும் 28-ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.