Kishanganj: இந்துக்கள் வணங்குவதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஈட்டி மற்றும் வாள்களை வைத்திருக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார்.


மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு:


பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், மக்கள் தங்கள் வீடுகளில் ஈட்டிகள், வாள்கள் மற்றும் திரிசூலங்களை வைத்திருக்க வேண்டும் என்று பேசியிருப்பதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தெய்வங்களின் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் தற்காப்புக்காகவும் பயன்படுத்தப்படலாம் என்று அவர் பரிந்துரைத்தார். ஹிந்து ஸ்வாபிமான் யாத்திரையின் ஒரு பகுதியாக, பீகாரில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாவட்டமான கிஷன்கஞ்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கிரிராஜ் சிங் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.


இதையும் படியுங்கள்: PM Modi and Chinese President Xi: 5 வருடங்கள் ஓவர் - சீன அதிபரை சந்திக்க உள்ள பிரதமர் மோடி - சண்டை முடியுமா? நட்பு வளருமா?


இந்துக்களுக்கு அச்சுறுத்தல்:


அராரியா, கதிஹார் மற்றும் பூர்னியா மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பிறகு, கிஷன்கஞ்சிற்கு வருகை தந்தபோது இந்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அவர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். பெகுசராய் லோக்சபா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிராஜ் சிங் கூறும்போது, ​​“ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்து பெண்கள் லவ் ஜிஹாத் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் இஸ்லாமுக்கு மாறுகிறார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. அவர்களின் வலையில் விழத் தயாராக இல்லாத பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் குற்றவாளிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை” என தெரிவித்தார்.


”ஆயுதங்களை பயன்படுத்துங்கள்”


தொடர்ந்து பேசுகையில், இஸ்லாமியர்களை விட இந்துக்கள் கணிசமாக இருக்கும் பகுதிகளில், கோயில்கள் சேதப்படுத்தப்படுகின்றன. கிறிஸ்தவ மிஷனரிகள் இந்த பகுதிகளில் தீவிரமாக உள்ளனர். ஆனால் இந்துக்களை மட்டுமே குறிவைக்கின்றனர். எனவே, ஒவ்வொரு இந்து கடவுளும் தெய்வமும் ஒரு திரிசூலம், வாள் அல்லது ஈட்டியை ஏந்தியிருக்கிறார்கள், இது புனிதமானது வலிமையால் ஆதரிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. எனவே, இந்த பொருட்களை உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இவற்றைப் பிரதிஷ்டை செய்த பிறகு வழிபடுங்கள், தேவை ஏற்படும் போது அவற்றை தற்காப்புக்காக பயன்படுத்துங்கள்”  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


”இந்துக்களுக்கு அழைப்பு”


கிரிராஜ் சிங் இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி,  "யாராவது உங்களை அறைந்தால், நீங்கள் ஆயிரம் அறைகளால் பதிலடி கொடுக்க வேண்டும். இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிரிந்தால் உடைந்து போவீர்கள். இந்து சமூகம் வலுவாக நிற்பதோடு, தங்கள் ஒற்றுமையைக் காக்க வேண்டும்” என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியுள்ளார்.