PM Modi and Chinese President Xi: பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று சந்தித்தால், இருவருக்கும் இடையே 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள சந்திப்பு இதுவாகும்.


சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி


புதன்கிழமை ரஷ்யாவின் கசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் ஐந்தாண்டுகளில் இரு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். அவர்கள் கடைசியாக 2019 இல் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற, ஒரு முறைசாரா உச்சிமாநாட்டிற்காக அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது இரு தலைவர்களும் சந்தித்தனர்.  இந்நிலையில், ”பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே இருதரப்பு சந்திப்பு புதன்கிழமை நடைபெறும் என்பதை என்னால் உறுதி செய்ய முடியும்" என்று வெளியுறவு செயலாளர் மிஸ்ரி செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


வெளியுறவுத்துறை விளக்கம்:


ஜூன் 2020 இல் கல்வானில் நடந்தது போன்ற மோதல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தியாவும் சீனாவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக வெளியுறவு செயலாளர் கூறினார். மேலும், "பேச்சுவார்த்தையின் கீழ் நிலுவையில் உள்ள பகுதிகளில், ரோந்து மற்றும் மேய்ச்சல் நடவடிக்கைகள் போன்றவை பொருந்தக்கூடிய இடங்களில் 2020 இல் இருந்த நிலை மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது. நேற்று எட்டப்பட்ட ஒப்பந்தம் கடந்த இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளை மையமாகக் கொண்டது" என்று வெளியுறவு செயலாளர் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.


முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு:


உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) கிழக்கு லடாக் செக்டரில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் எல்லைப் போர் ஒரு தீர்மானத்தை நெருங்கி வரும் நிலையில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு நடைபெற உள்ளது. 


லடாக் எல்லை பகுதியில் இருதரப்பு மோதல் தொடங்குவதற்கு முன்பு இந்திய ராணுவம் பயன்படுத்திய சில பகுதிகளில் மீண்டும் ரோந்து செல்ல ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய இராணுவம் மற்றும் சீன மக்கள் விடுதலை ராணுவம் ஆகிய இரண்டும் தற்போது மோதல் நடந்து கொண்டிருக்கும் எஞ்சிய இடங்களிலிருந்தும் விலக விரும்புவதாக பல ஆதாரங்கள் ஏபிபி லைவ்விடம் தெரிவித்தன.
 
16வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக மாஸ்கோவில் இருந்து கிழக்கே சுமார் 900 கிமீ தொலைவில் உள்ள கசானுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய அவர், உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானையும் சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று சீன அதிபரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த சந்திப்பின் மூலம் இருநாடுகளுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்னை முடிவுக்கு வந்து, சுமூகமான உறவு தொடரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.