கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், அந்த மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பெங்களூரின் பல பகுதிகளும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.


சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்:


இந்த நிலையில், கிழக்கு பெங்களூரில் உள்ள பபுசபலயா எனும் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வந்தது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த கட்டிடத்தின் இடிபாடுகளின் உள்ளே 17 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.






சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு மீட்பு படையினரும், போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது வரை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 பேரை மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஒருவர் உயிரிழப்பு:


இந்த இடிபாட்டில் சிக்கியவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயமும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியிருப்பதாலும், தொடர் மழை காரணமாகவும் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


தொடர் மழை காரணமாக இந்த அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கட்டிட விபத்து தொடர்பாக அந்த மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விபத்திற்கு கனமழைதான் காரணமா? கட்டிடம் தரமற்று இருந்ததா? என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


பெங்களூரில் தொடரும் மழை:


கட்டிடம் சரிந்து விழுந்த இடத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல தேங்கியிருக்கிறது. மீட்பு பணியில் போலீசார், தீயணைப்பு மீட்பு படையினருடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் களத்தில் இறங்கியுள்ளனர். கர்நாடகாவில் உள்ள ஏலகங்காவில் நேற்று நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை 6 மணி நேரத்தில் 157 மி.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.