Maharashtra Elections 2024: மகாராஷ்டிராவில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, விரைவில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.


மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்:


மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி, தங்களுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டில் உடன்பாட்டை எட்டியுள்ளது. அதன்படி,  மாநிலத்தில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 90-95 இடங்களிலும், காங்கிரஸ் 103-108 இடங்களிலும், சரத் பவாரின் என்சிபி (எஸ்பி) 80-85 இடங்களிலும் போட்டியிட உள்ளன. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உட்பட மற்ற சிறிய கட்சிகள் 3-6 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.


மும்பை தொகுதி விவரங்கள்:


இதனிடையே, மும்பையில் உள்ள தொகுதிகளை பங்கீடு செய்வதில் தான் கடும் இழுபறி நீடித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த மாநகராட்சியில் மொத்தமுள்ள 36 தொகுதிகளில் சிவசேனா 18 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், என்சிபி (எஸ்பி) 2 இடங்களிலும் போட்டியிட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்,  சமாஜ்வாதி கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றன. 


வேட்பாளர்கள் பட்டியல்:


எம்.வி.ஏ கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சிவசேனா (யுபிடி), மற்றும் என்சிபி (எஸ்பி) ஆகிய கட்சிகள், சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையில், 63 தொகுதிகளில் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தனது முதல் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா படேல்,  முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சவான், நிதின் ராவத் ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியலில் இடம்பெறலாம்.


எதிர்க்கட்சிகளின் தொகுதிப்பங்கீடு:


இதனிடையே, ஆளும் மகாயுதி கூட்டணியும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை முடித்துவிட்டதாகத் தெரிகிறது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 78 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) 54 இடங்களிலும், பாஜக 156 இடங்களிலும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாஜக ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும் 45 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தானே நகரின் கோப்ரி-பஞ்சபகதியில் போட்டியிடுகிறார். கடந்த 2022ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வெளியேறியபோது, ஷிண்டேவிற்கு ஆதரவாக இருந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.