சிக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானி ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சமீப காலமாக காலிஸ்தானி அதரவாளர்கள் செய்யும் செயல் இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியது.
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தானி ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மிரட்டல் விடுத்த காலிஸ்தான் ஆதரவாளர் பன்னுன்:
இப்படிப்பட்ட சூழலில், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி( எஸ்.எப்.ஜே) என்ற காலிஸ்தான் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த்சிங் பன்னுன், ஏர் இந்தியா விமானத்தின் பயணிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
அதில், “சீக்கிய சமுதாயத்தினர் ஏர் இந்தியாவில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உலகம் முழுவதும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியவை இயக்க அனுமதிக்க மாட்டோம். நவம்பர் 19ஆம் தேதி முதல் ஏர் இந்தியா சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என்று சீக்கிய சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்துகிறோம். ஏனெனில் இது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்”
மேலும் அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் இந்திரா காந்தி விமான நிலையம் மூடப்பட வேண்டும் என்றும் எச்சரித்தார். இதை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் இயங்கும் அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு படையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஸ்கெட்ச் போடும் தேசிய புலனாய்வு முகமை:
நிஜ்ஜார் கொலை வழக்கு இந்தியாவுக்கும் கனடாவுக்கு ஏற்கனவே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளதால், பன்னுன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை பதற்றத்தை மேலும் தூண்டியது.
இந்த நிலையில், மிரட்டல் விடுத்த பன்னுனுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் மற்றும் உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதலே என்ஐஏவின் கண்காணிப்பு வளையத்தில் பன்னுன் இருந்து வருகிறார். கடந்த செப்டம்பரில், சண்டிகரில் உள்ள அமிர்தசரஸில் உள்ள அவரது வீடு மற்றும் நிலத்தை என்ஐஏ பறிமுதல் செய்தது. கடந்த 2021ஆம் ஆண்டு, பிப்ரவரி 3ஆம் தேதி, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் பன்னுனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: Uttarkhand Tunnel Collapse: சுரங்கப்பாதையில் தவிக்கும் 40 தொழிலாளர்கள்! 3வது முறையாக முதலமைச்சருக்கு போன் போட்ட பிரதமர்!