உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஒரு வார காலமாக தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருப்பவர்களின் நிலை என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.


தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம்  தொலைபேசியில் பேசி உள்ளார். இது தொடர்பாக உத்தரகண்ட் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுரங்கப்பாதையில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதை அடுத்து,  பிரதமர் மோடி மூன்றாவது முறையாக முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார்.  


அப்போது, மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.  மத்திய மற்றும் மாநில அதிகாரிகளிடையே ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் போதுமான உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய முடியும்.  சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும். அதற்கான உதவிகளை மத்திய அரசு எந்த நேரத்திலும் வழங்கும். சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் மன உறுதியை பேணுவது மிகவும் முக்கியம்" என்று பேசியிருந்தார். 


உரையாடலின் போது, சுரங்கப்பாதையில் சிக்கி தவிக்கு தொழிலாளர்களுக்கு தண்ணீர், உணவு, ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருவதை முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார். மேலும், மீட்பு பணிகள் தொடந்து நடைபெற்று வருகிறது. நிபுணர்களின் கருத்துகள் அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மீட்பு பணிகள் தொடர்ந்து ஆய்வு நடத்துகிறேன் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.  மேலும், தொழிலாளர்களை பத்திரமாக வெளியேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதாகவும், மருத்துவ குழுக்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். 


40 தொழிலாளர்களின் நிலை என்ன?


உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது. அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 40 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.  


சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரகாண்ட்,  இமாச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தொடார்ச்சியாக ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களை வெளியே கொண்டு வர தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, இந்தோ-தீபெத் எல்லை காவல் படை, அதிவிரைவு படை என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கு 6 இன்ச் குழாய் மூலம் உணவு, மருந்து என தேவையான பொருட்களை அனுப்பி வருகின்றனர்.  ஒரு வாரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எப்போது இவர்கள் மீட்கப்படுவார்கள் என எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.