கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் அரளி இலைகளை உட்கொண்ட பெண் இறந்ததையடுத்து, கோயில்களில் அரளி பூவைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்செயலாக அரளி பூ ( ஓலியாண்டரை ) உட்கொண்டதால், பெண் இறந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு பூவைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண் உயிரிழப்பு:
கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, கேரளாவைச் சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்ற பெண்ணுக்கு இங்கிலாந்தில் செவிலியராக பணி புரிவதற்கு வேலை கிடைத்தது. இந்நிலையில், இவர் 10 நாளைக்கு முன்பு கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றபோது, வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அதையடுத்து, ஒரு நாள் கழித்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது இரத்தத்தில் நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்களிடம் அரளி இலையை தெரியாமல் சாப்பிட்டு விட்டு துப்பியதாகச், அந்த பெண் சொன்னதாகவும் தகவல் வெளியாகின்றன. “நச்சுத்தன்மை கொண்ட ‘அரளி’ இலைகளை தற்செயலாக உட்கொண்டது, அவரது மரணத்திற்கு வழிவகுத்தது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. இலைச்சாறு உள்ளே சென்று, மாரடைப்பை உண்டாக்கி, இறுதியில் அவர் மரணத்திற்கு வழிவகுத்ததாகவும், அவருடைய மரணத்திற்கு வேறு எந்த காரணமும் இல்லை, ”எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாதிரி படம்: image credits: @pixabay
கோயில்களில் தடை:
இந்நிலையில் 'அரளி' (ஒலியண்டர்) பூவைப் பயன்படுத்துவதற்கு கேரளாவில் உள்ள இரண்டு கோயில் நிர்வாக வாரியங்கள் தடை விதித்துள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை உட்பட தெற்கு கேரளாவில் உள்ள பெரும்பாலான கோயில்களை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவிக்கையில், அதன் டிடிபி -க்கு கீழ் உள்ள கோயில்களில் அரளிப் பூவைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவில்களில் குறிப்பாக பிரசாதம் போன்றவற்றில் பூவைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க முடிவு செய்துள்ளோம் என்றும், அதற்கு பதிலாக, துளசி இலைகள், மற்றும் செம்பருத்தி ஆகியவற்றை வழங்க வேண்டும். அரளிப்பூக்கள் பூஜைகளுக்குப் பயன்படுத்தப்படலாம், ஆனால் அது பக்தர்களின் கைகளுக்குச் செல்லக்கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாதிரி படம்: image credits: @pixabay
இதையடுத்து, வடக்கு கேரளாவில் சுமார் 1,300 கோயில்களை நிர்வகிக்கும் மலபார் தேவசம் போர்டும் (MDB) அறிவிப்பு வெளியிட்டது. எம்.டி.பி தலைவர் எம்.ஆர்.முரளி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “கோயில்களில் நடக்கும் சடங்குகளில் அரளி பூ அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் எச்சரிக்கை:
பூவில் நச்சு பொருட்கள் இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளதையடுத்து , இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக ஒலியாண்டர் என்று அழைக்கப்படும் அரளிப் பூவில் நச்சு கலவைகள் உள்ளன மற்றும் அதை உட்கொள்வதால் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.