Afghanistan Flood: ஆஃப்கானிஸ்தான் நாட்டில் கனமழை கொட்டி தீர்த்த கனமழையில் 200க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வடமேற்கு எல்லைப் பகுதியையொட்டி, ஆஃப்கானிஸ்தான் நாடானது அமைந்துள்ளது. அங்கு, கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு பல்வேறு ஆறுகளில் வெள்ளமானது கரை புரண்டு ஓடியது. இதனால் பல்வேறு வீடுகள் வெள்ளத்துக்குள் மூழ்கின. இந்த வெள்ளத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.
வெளுத்து வாங்கும் மழை:
ஆப்கானிஸ்தானில், தற்போது பருவகால மழை பெய்து வருகிறது. அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 200ஐ கடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது. நேற்று மட்டும், வடக்கு மாகாணமான பாக்லானில் சுமார் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 300 பேர் இறந்துள்ளதாகவும் 1000 பேர் இறந்துள்ளதாகவும் ஆஃப்கானிஸ்தான் செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நாவின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்ததாவது, பாக்லான் மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த கடுமையான வெள்ளப்பெருக்கை, அங்கு குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கவில்லை. வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் இரவு வேளையிலும் லேசான மழை பெய்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகள் தீவிரம்:
இராணுவம் மற்றும் காவல்துறை உதவியுடன், சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என அவசர கால பணியாளர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகிறார்கள். திஷ்கன் பகுதியில் வெள்ளமானது சாலையைத் துண்டித்ததில், சுமார் 20,000 மக்கள் வசிக்கும் பகுதியை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டது என்றும் தலிபான அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், ஆஃப்கானிஸ்தானில் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.