சாவர்க்கரைக் கொண்டாடுவதற்காக பாஜகவை அடிக்கடி தாக்கும் காங்கிரஸ் கட்சிக்கு நேற்று பெரும் சங்கடம் ஏற்படும் வகையிலான சம்பவம் நிகழ்ந்துள்ளது


காங்கிரஸ் பேனரில் சாவர்க்கர்


கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவாவில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கடந்து செல்வதைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரில், சந்திரசேகர் ஆசாத், ரவீந்திரநாத் தாகூர், கோவிந்த் பல்லப் பந்த், அபுல் கலாம் ஆசாத்  ஆகியோருடன் சாவர்க்கருடைய புகைப்படமும் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சை ஆனது. இந்த பேனரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதால், காங்கிரஸ் கட்சியினர் சாவர்க்கரின் புகைப்படத்திற்கு மேல் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை வைத்து மறைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதனை மாற்றுகையில் பேனர் மொத்தமாக சேதம் அடைந்தது. தீவிரவாத சக்திகளை திருப்திப்படுத்த சாவர்க்கரின் படத்தை காங்கிரஸ் மறைத்துள்ளது என்று பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். “இந்த கட்சி நாட்டிற்கு எதிரானது என்பதை காங்கிரஸ் மீண்டும் நிரூபித்துள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரை என்பது தேசவிரோத சக்திகளால் யாத்திரை நடத்தப்படுகிறது. சுயமரியாதையுள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கட்சியை விட்டு வெளியே வர வேண்டும்,'' என்றார்.



ஷெஹ்சாத் பூனாவாலா ட்வீட்


பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா செய்துள்ள டீவீட்டில் “அச்சச்சோ! வரலாற்றை இருட்டடிப்பு செய்ய ராகுலின் எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை! எர்ணாகுளம் ஆலுவாவில் நடந்த பாரத்ஜோடோ யாத்திரையில் வீர் சாவர்க்கரின் புகைப்படம் இடம்பெற்றதன் மூலம், ராகுல் காந்தி இத்தனை நாள் வீர் சாவர்க்கருக்கு எதிராக பொய்கள் பரப்பி வந்தது அம்பலமானது!" என்று எழுதி இருந்தார். அவர் பதிவிட்டிருந்த மற்றொரு டீவீட்டில், “ராகுல் ஜி, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி... வரலாறும் உண்மையும் சீக்கிரத்தில் வெளிவரும். சாவர்க்கர் ஒரு வீரர்! மறைந்திருப்பவர்கள் தான் கோழைகள்!" என்று பதிவிட்டிருந்தார். 


தொடர்புடைய செய்திகள்: “தாய்மை வாழ்கென” : நீலகிரியில் தாயைப் பிரிந்த குட்டி யானை.. சேர்த்து வைத்த வனத்துறையினர்.. நெகிழ்ச்சி வீடியோ


பாஜகவுக்கு காங்கிரஸ் பதில்


பிஜேபியின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மால்வியா, "தாமதமாக இருந்தாலும் ராகுல் காந்திக்கு இது ஒரு நல்ல புரிதல், அவருடைய தாத்தா நேரு தன்னை விடுவிக்க அனுமதிக்கவேண்டி பஞ்சாபின் நபா சிறையில் அடைக்கப்பட்ட இரண்டே வாரங்களில் ஆங்கிலேயர்களுக்கு கருணை மனு எழுதினார்", என்று எழுதி இருந்தார். காங்கிரஸின் ஊடகங்கள் மற்றும் விளம்பரத் தலைவரான பவன் கேரா, அமித் மாளவியாவைத் தாக்கி, “வழக்கமபோல வரலாற்றை திரித்து கூறுகிறார் அமித் மாளவியா. நேரு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சிறையில் இருந்தபோதிலும், சாவர்க்கரைப் போலவும், வாஜ்பாய் போலவும் கருணை மனுவைச் சமர்ப்பித்ததில்லை" என்று கூறினார். 






ஆலுவா காங்கிரஸ் எம்பி விளக்கம்


கேராவின் ட்வீட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் கவுரவ் பாண்டி, “ஆர்எஸ்எஸ் மீது சாவர்க்கர் கொண்டிருந்த அவமதிப்பு இந்த போலி வரலாற்றாசிரியருக்குத் தெரியுமா? ஒரு மனிதனின் நல்ல வாழ்க்கை வரலாறு அதை வெளிப்படுத்தும்", என்று கூறி இருந்தார். ஆலுவா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அன்வர் சதாத், “ஒரு கட்சி ஊழியர் தவறிழைத்துவிட்டார், அது அதிகாரப்பூர்வமாக காங்கிரஸால் வைக்கப்பட்ட பேனர் இல்லை” என்றார். மேலும் அவர் கூறியதாவது, "ராகுலை வரவேற்கும் வகையில் கட்சியினர் பலர் தானாக முன்வந்து இதுபோன்ற பேனர்களை கட்டுகின்றனர். இணையத்தில் இருந்து புகைப்படங்களை அச்சிடுவதற்கு தேர்ந்தெடுக்கும்போது பேனர் வைத்தவர் அரசியலைப் பற்றி சிந்திக்காமல் இருந்துள்ளார். அந்த பேனருடன் கட்சிக்கு அதிகாரப்பூர்வ தொடர்பு இல்லை. இருப்பினும், அவர் மீது மாவட்ட தலைமை நடவடிக்கை எடுக்கும்,'' என்றார். இந்த விவகாரத்தில் நடவடிக்கையை எதிர்கொண்ட செங்கமாநாடு தொகுதியின் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தொழிலாளி சுரேஷ் அதானி பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.