அக்டோபர் 17 ம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெறும் என்றும், அக்டோபர் 17 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது. 


ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எழ தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட், கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார். 


தலைவர் பதவிக்கான தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடுவார் என தகவல் வெளியாகி வரும் நிலையில், தேர்தலுக்கான தனது வியூகம் குறித்து சோனியாவுடன் கெலாட் ஆலோசனை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இச்சூழலில், தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலக கெலாட் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.


சோனியாவுடனான சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பேசியுள்ள வேணுகோபால், தேர்தலை நடுநிலையாக நடத்த வேண்டும் என்றும், எந்த வேட்பாளருக்கும் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி குறித்த கேள்விக்கு, அது யார் போட்டியிடுகிறார் என்பதைப் பொறுத்தது என பதில் அளித்தார்.


தலைவராக தேர்வு செய்யும் பட்சத்தில், ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை, அவரது போட்டியாளராக கருதப்படும் சச்சின் பைலட்டுக்கு தர கெலாட் மறுத்து வருவதாகவும் காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்து விவரித்த கெலாட், "ஒருவர் அமைச்சராகவும் இருக்க முடியும் காங்கிரஸ் தலைவராகவும் இருக்க முடியும். ஒரு பதவியில் இல்லை, மூன்று பதவிகளை என்னால் எளிதாக கையாள முடியும்" என்றார்.


ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் குதித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகலவ் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இதில் மற்றொரு ட்விஸ்ட்டாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் திக் விஜய் சிங் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாக உள்ளன.


தனியார் தொலைக்காட்சியான என்டிடிவிக்கு திக் விஜய சிங் அளித்த பேட்டியில், தானும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார். மேலும், தலைவர் பதவியை கெலாட் ஏற்றால், முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் கண்டிப்பாக விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.


சசி தரூரா அல்லது கெலாட்டா என தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திக் விஜய சிங், "பார்க்கலாம். நானும் என்னை போட்டியிலிருந்து விலக்கவில்லை. ஏன் என்னை போட்டியிலிருந்து வெளியே வைக்க விரும்புகிறீர்கள்?. போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்கான விடையை 30ஆம் தேதி மாலை (வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்) தெரிந்து கொள்ளலாம்.


காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்டியில் இல்லாமல் இருப்பது கவலை ஏதவும் இல்லை. யார் போட்டியிட விரும்புகிறாரோ அவருக்கு போட்டியிட உரிமை உள்ளது. மேலும் ஒருவர் போட்டியிட விரும்பவில்லை என்றால், அவர்களை கட்டாயப்படுத்தி போட்டியிட முடியாது. அவ்வளவுதான்" என்றார்