இந்திய அரசின் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் எடுத்த முயற்சிக்காக இந்தியா ஐநா விருதை வென்றுள்ளது.






தற்போதைய ஆரம்ப சுகாதார அமைப்பில், இந்திய உயர் ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு திட்டம் (IHCI) சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாகக் கூறி அங்கீகரிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் பணியை இந்திய உயர் ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு திட்டம் பலப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என பதிவிட்டுள்ளார்.


சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), மாநில அரசுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இந்தியா கிளை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால், இந்திய உயர் ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு திட்டமானது '2022 ஐநா இன்டரேஜென்சி டாஸ்க் ஃபோர்ஸ் மற்றும் WHO ஸ்பெஷல் புரோகிராம் ஆன் பிரைமரி ஹெல்த் கேர் விருதை வென்றது. 


ஐநா பொதுச் சபையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்து விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று அல்லாத நோய்களை (என்சிடி) தடுத்தது, கட்டுப்படுத்தியது, மக்களை மையப்படுத்திய ஒருங்கிணைந்த முதன்மை சிகிச்சையை வழங்கியது, அர்ப்பணிப்புடன் செயல்பட்டது, அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையயை இந்த விருது அங்கீகரிக்கிறது என்று ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் நான்கு பெரியவர்களில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதை வைத்தே இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை மதிப்பிட முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க ஆரம்ப சுகாதார அமைப்பின் மட்டத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பங்களிக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த திட்டம், 2017 இல் தொடங்கப்பட்டது. 23 மாநிலங்களில் 130க்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல மையங்கள் (HWCs) உள்பட உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 34 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசு சுகாதார வசதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.