கேரளா டு லண்டன் :


சைக்கிளில் பயணம் செய்வது பலருக்கு பிடிக்கும். சமீபத்தில் கூட சென்னையை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் சைக்கிளிலேயே தினமு 40 கிமீ  பயணம் செய்து பணிக்கு செல்கிறார் என்ற செய்தியை பார்த்தோம். இவருக்கு ஒரு படி மேலாக கேரள இளைஞர் ஒருவர்  இந்தியாவில் இருந்து லண்டன் வரையில் சைக்கிளேயே பயணத்தை துவங்கியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா ? . 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு , 34 வயதான ஃபைஸ் அஷ்ரப் அலி தனது ஐடி வேலையை உதறி தள்ளிவிட்டு , அமைதிக்கான பயணத்தை முன்னெடுத்துள்ளார்.




450 நாட்களில் லண்டன் :


ஐடி யில் அதிகம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த  ஃபைஸ் அஷ்ரப் அலி சாகச பயணங்களை விரும்பக்கூடியவர் . எனவே அவர் தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் இருந்து லண்டன் வரையில் சைக்கிளிலேயே சாகச பயணத்தை செய்ய விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க ”Wheelers" என்னும் நிறுவனம் முன் வந்துள்ளது. 35 நாடுகளின் வழியாக  30,000 கி.மீ.களை கடந்து 450 நாட்களில் லண்டனை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 34 வயதான அலி தனது சைக்கிள் பயணம் மூலம் அமைதி மற்றும் அன்பின் செய்தியை பரப்புவேன்  என நம்புகிறார். பயணத்தின் பொழுது அஷ்ரப் “ ஹார்ட் டு ஹார்ட் “ என்னும் முழக்கத்தை எழுப்புவார் என கூறப்படுகிறது.




இந்த நாடுகளின் வழியே சைக்கிள் பயணம் :


கடந்த திங்கள் கிழமை , கேரள் மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பிய  ஃபைஸ் அஷ்ரப் அலியின் சாகச பயணத்தை மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி  கொடி அசைத்து துவக்கி வைத்தார். பாகிஸ்தான் மற்றும் சீனா வழியாக செல்வதற்கு அந்நாட்டு அரசுகள் விசா வழங்காததால்  அந்நாட்டிற்குள்   ஃபைஸ் அஷ்ரப் அலியால் நுழைய முடியாது. முதலில் சைக்கிளின் மூலம் மும்பை விமான நிலையத்தை அடையும்   ஃபைஸ் அஷ்ரப் அலி, அங்கிருந்து விமானம் மார்கமாக ஓமன் செல்லவுள்ளார்.  அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஈராக், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளைக் கடந்து தனது சைக்கிள் பயணத்தைத் தொடரவுள்ளார். பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், ஆஸ்திரியா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் வழியாக லண்டன் வரை மிதிவண்டியில் பயணிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஃபைஸ் அஷ்ரப் அலி, ஐடி நிறுவனமான விப்ரோவில் தனது வேலையை விட்டுவிட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார். 2019-ல் அவரது சொந்த மாவட்டமான கோழிக்கோட்டில் இருந்து சிங்கப்பூருக்கு பயணம் மேற்க்கொண்டார்.ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக்  நிறுவனம் மற்றும்  ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு உள்ளிட்டவை ஃபைஸ் அஷ்ரப் அலிக்கு நிதி உதவி செய்கின்றன.