கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அதி வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல் காரணமாக கூடிய அவசரக் கூட்டத்தில் 1 கி.மி. சுற்றளவில் உள்ள பறவைகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


பறவைக்காய்ச்சல்


கடந்த சில நாட்களாக பரவி வரும் பறவைக் காய்ச்சலால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கோட்டயம் மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. முன்னதாக, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியதால், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிமீ சுற்றளவில் சுமார் 8,000 வாத்துகள், கோழிகள் மற்றும் பிற வீட்டுப் பறவைகளை அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆர்ப்பூக்கரை மற்றும் தலையாழம் ஊராட்சிகளில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீ தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட உயர் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடைபெற்றது. 



அழிக்க உத்தரவு


இந்த அவசர கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கி.மீ., சுற்றளவில் உள்ள பறவைகளை கால்நடை பராமரிப்புத் துறை மேற்பார்வையில் அழிக்க, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட பிஆர்டி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: இதெப்படி சாத்தியம்..? ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கணிப்பு..! அதேநாள், அதே தேதியில் கோப்பையை வென்ற மெஸ்ஸி..!


10கி.மி. சுற்றளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை


டிசம்பர் 13 முதல் மூன்று நாட்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கோழி, வாத்து, பிற நாட்டுப் பறவைகள், முட்டை, இறைச்சி மற்றும் உரம் விற்பனை மற்றும் போக்குவரத்துக்கு ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய் ஏற்பட்டுள்ள மையப் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 19 உள்ளாட்சி அமைப்புகளில் வழக்கத்திற்கு மாறாக கோழி, வாத்து அல்லது பிற நாட்டுப் பறவைகள் இறந்தால், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார்.



எதனால் பரவுகிறது


கோட்டயம் மாவட்டத்தில் காணப்படும் H5N1 வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணம் புலம்பெயர்ந்து வரும் பறவைகளும், கடலில் இருந்து நாட்டுக்குள் வந்த பறவைகளும் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்ப்பூக்கரையில் உள்ள வாத்துப் பண்ணையிலும், தலையாழத்தில் உள்ள பிராய்லர் கோழி பண்ணையிலும் பறவைகள் இறந்ததை அடுத்து, அதன் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. ஆய்வின் முடிவுகள் அடிப்படையில் பறவை காய்ச்சல் என இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறினர். பாதிக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் பறவைகளை அழிப்பதற்கும், அவற்றை அப்புறப்படுத்துவதற்கும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் விரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தகவல் தெரிவித்தனர்.