கடந்த ஒரு மாதமாக 22ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று இன்று முடிவுக்கு வந்துள்ளது. கால் பந்து உலகின் ‘மெஸ்ஸையா’, மேஜிக்கல் மெஸ்ஸி என்றெல்லாம் போற்றப்படும் உலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரான மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணியும், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இறுதிப்போட்டியில் மோதின. இந்த போட்டியில் அர்ஜெண்டினா பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.
வெற்றியுடன் விடைபெற்ற மெஸ்ஸி:
கால் பந்து வரலாற்றில் இதுவரை ஆறு உலகக்கோப்பைகளில் விளையாடியுள்ள லயோனல் மெஸ்ஸி, இந்த உலகக்கோப்பைத் தொடருடன் விடை பெறுகிறார். ஆனால் உலகின் மிகச்சிறந்த வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் மெஸ்ஸி இதுவரை ஒருமுறைகூட உலக்கோப்பையை வெற்றிபெற்று கையில் ஏந்தாத நிலையில், மெஸ்ஸியின் கைகளில் உலகக்கோப்பையைத் தவழவிட்டு அழகு பார்க்க வேண்டும் என்பதே ஒவ்வொரு அர்ஜெண்டினா அணி வீரர் மற்றும் உலகம் முழுவதுமுள்ள மெஸ்ஸி ரசிகர்களின் கனவாக இருந்து வந்துள்ளது.
7 ஆண்டுகளுக்கு முன்பே கணிப்பு:
இந்நிலையில்,34 வயது மெஸ்ஸி 2022ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி உலகக்கோப்பை முத்தமிட்டு உலகின் தலைசிறந்த வீரராக உருவெடுப்பார் என 7 ஆண்டுகளுக்கு முன்னரே பதியப்பட்ட ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகிறது.
ஜோஸ் மிகெல் போலன்கோ எனும் நபர் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி இந்த ட்வீட்டைப் பதிவிட்டுள்ள நிலையில், வேண்டுமென்றால் ஏழு ஆண்டுகள் கழித்து இதனை உறுதி செய்து கொள்ளுங்கள் என்றும் சவால் விடும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இந்த நபரின் ஆரூடம் 7 ஆண்டுகள் கழித்து நனவாகி வைரலாகி உள்ளது. இந்த ட்வீட் 63 ஆயிரத்தும் மேற்பட்ட லைக்குகளையும், 21 ஆயிரம் ரீட்வீட்டுகளையும் பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.