இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கென்ட் (Kent) என்ற நாய் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் இருந்து பாதுகாவலரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் பயங்கரவாதியும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். 


இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகள் தப்பித்து ஓட முயற்சித்தனர். அவர்களை ராணுவத்தினர் துரத்திச் சென்றனர். அவர்களுக்கு முன்னால் கென்ட் என்ற 6 வயது லெபரடார் வகை  நாய் பயங்கரவாதிகளை துரத்திச் சென்றது. அப்போது பயங்கரவாதிகள் பாதுகாவலரை நோக்கி திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதை கவனித்த மோப்ப நாய் தனது பாதுகாவலரை பாதுகாக்க துப்பாக்கி குண்டை தன் மீது வாங்கி உயிரிழந்தது. இதனால் பின்னால் வந்த ராணுவ வீரர்கள் உயிர் தப்பினர். இச்சம்பவம் ராணுவ வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக ராணுவ அதிகாரி கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தேடுதல் வேட்டையின்போது, ராணுவ வீரர்களை வழிநடத்திச் சென்ற 21-வது  குழுவைச் சேர்ந்த 6 வயதான பெண் லேபரடார் வகையைச் சேர்ந்த கென்ட் என்ற நாய் மரணம்.  தப்பி ஓடிய பயங்கரவாதிகளின் பாதையில் சென்றபோது உயிரிழந்தது. ரஜோரி மாவட்டத்தில் உள்ள நார்லா பகுதியில் நிகழ்ந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவர் பிடிபட்டார். இந்த தேடுதல் வேட்டையின்போது ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். மேலும், ஒரு போலீஸ் எஸ்பிஓ உள்பட மூன்று பேர் காயம் அடைந்தனர் என ஜம்மு ஏ.டி.ஜி.பி. முகேஷ் சிங் தெரிவித்து உள்ளார்.




மேலும் வாசிக்க..AR Rahman Concert: பாதிக்கப்பட்ட பெண் பற்றியும் யோசிங்க.. பாடகி ஸ்வேதா மோகன் பதிவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!