சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கடந்த இரு தினங்களாக தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வந்தது. 


நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த நிர்வாக குளறுபடியால் டிக்கெட் வாங்கியும் அரங்கிற்குள் நுழைய முடியாமல் பலரும் தவித்தனர். அரங்கிற்குள் நுழைய முயற்சித்த பலருக்கும் மோசமான அனுபவமும் ஏமாற்றமும் தான் மிஞ்சியது. 


 



ஏ.ஆர் ரஹ்மான் அறிக்கை : 


நிகழ்ச்சியில் காண சென்ற இடத்தில் பார்வையாளர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர்களின் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் சோசியல் மீடியா மூலம் பதிவிட்டனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தானே பலியாடாவதாக பகிர்ந்த ட்வீட், திரைத்துறையினரை கவலையில் ஆழ்த்தினாலும், பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல் படுத்தவில்லை.


ஏ.ஆர்.ரஹ்மானின் மன்னிப்பு உணர்ச்சியற்றதாக இருப்பதாக நேற்று நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பாடகியாக ஸ்வேதா மோகனும் கலந்துகொண்டு பாடியிருந்தார். இந்நிலையில், மோசமான வகையில் துன்புறுத்தலை சந்தித்த பெண் இயக்குநர் ஒருவரின் பதிவுக்கு ஸ்வேதா மோகன் அளித்துள்ள பதில் நெட்டிசன்களின் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


 






ஸ்வேதா மோகன் பதில் :


ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற சுயாதீன பெண் இயக்குநர் ஒருவர், தான் அத்துமீறலை எதிர்கொண்டது பற்றி பகிர்ந்து கொண்ட ஒரு பதிவுக்கு, பாடகி ஸ்வேதா மோகன் பதில் அளித்திருந்தார். இந்நிலையில், ஸ்வேதா மோகன் இந்த பதிவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஸ்வேதாவின் பதிவில் பாதிக்கப்பட்ட பெண்ணிக்கு ஆறுதல் சொல்வதற்கு பதிலாக ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றியே கவலையே அதிகம் வெளிப்பட்டது.


"இந்த ட்வீட்டை புறக்கணிக்க முடியவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் அமைதி, அன்பு மற்றும் மனிதநேயத்திற்காக நின்ற ஒரு ஐகானின் இசை நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் ரசிகர்கள் ஏ.ஆர்.ஆர் சாரின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தகுதியானவர்களா?


ஒவ்வொரு கச்சேரியிலும் அவர் பெண்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை நினைவூட்டும் வகையில் பாடல்கள்களை டெடிகேட் செய்பவர். வலிமையாக இருங்கள், #சிங்கப்பெண்ணே!! நாம் ஒரு கேவலமான சமுதாயத்தில் வாழ்கிறோம். என் இதயம் உனக்காகத் துடிக்கிறது. இதை கடந்து மீண்டும் எழ உங்களுக்கு தேவையான ஆற்றலை அனுப்புகிறேன்" என பதிலளித்து இருந்தார் ஸ்வேதா மோகன். 


 






கடுமையான விமர்சனம் :


ஆனால் ஸ்வேதாவின் இந்த பதிவை சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். “ஏ.ஆர்.ஆர் பற்றி பேசுவதை தவிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்துங்கள், மிகவும் உணர்ச்சியற்ற மற்றும் அசட்டையான பதில், "அவர் தகுதியானவர், சிறந்தவர்..."அப்படியா? உண்மை என்னவென்றால், பார்வையாளர்கள் தான் சிறந்த ஏற்பாடுகளுக்கு தகுதியானவர்கள், சினிமாவை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் ஆதரவா? பாதிக்கப்பட்டவர்களுக்கு இல்லையா, ஏற்கனவே ஒரு முறை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட போதிலும் இரண்டாவது முறையும் சரியான ஒரு இடத்தை தேர்ந்து எடுக்காதது, அதை சரிபார்க்க யாரும் அக்கறை கட்டாதது பற்றி உங்களுக்கு தெரியுமா? " என பலரும் அவர்களின் விமர்சனங்களை ஸ்வேதா மோகனின் ட்வீட்டுக்கு எதிராக பதிவு செய்து வருகிறார்கள்.