திறன் மேம்பாட்டு வழக்கில் ஊழல் செய்ததாக கூறி தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். 


இந்தநிலையில், சந்திரபாபு கைது செய்யப்பட்டது தொடர்பாக தெலுங்கு திரைப்பட நடிகரும், இந்துப்பூர் தொகுதி தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏவுமான நந்தமுரி பாலகிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ எந்தவித ஆதாரமும் இல்லாமல் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டிருப்பது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. 


முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பொதுநலப்பணிகளை மேற்கொண்டு வந்தாலும், அவரது செயல் முழுவதும் பழிவாங்குதல்களில் மீதே அதிகமாக இருக்கிறது. ஊழல் வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி சிறைக்கு சென்றதால், எப்படியாவது அனைவரையும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார். 


சந்திரபாபு பல கல்வி நிறுவனங்களைக் கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார். திறன் மேம்பாட்டுத் திட்டம் முதலில் குஜராத்தில் தொடங்கப்பட்டு, அதன் பின்னர் ஆந்திரப் பிரதேசத்தில் கொண்டு வரப்பட்டது.ரூ. 3,281 கோடி நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, சீமென்ஸ் மென்பொருளை வழங்கியபோது, ​​​​டிசைன் டெக் பயிற்சியை வழங்கியது. இந்துப்பூரில், திறன் மேம்பாட்டு மேளா நடத்தப்பட்டது, இதில் சுமார் 1,200 இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 2.13 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களில் 72,000 பேருக்கு வேலை கிடைத்துள்ளது


ஜெகன் ED உட்பட பல வழக்குகளை எதிர்கொண்டு இப்போது ஜாமீனில் இருக்கிறார். வரும் தேர்தலில் தோல்வி பயத்தில் இந்த நடவடிக்கைகளில் இறங்குகிறார். 16 மாதங்கள் சிறையில் இருந்த அவர், சந்திரபாபுவை குறைந்தபட்சம் 16 நாட்களுக்கு சிறையில் அடைக்க திட்டமிட்டார். திறன் மேம்பாட்டுத் திட்டம் முதலில் குஜராத்தில் தொடங்கியது, முதல்வர் ஒரு கொள்கை வகுப்பாளர் மட்டுமே. அதை செயல்படுத்துவது அதிகாரிகள்தான். அரசு ரூ.370 கோடி செலவு செய்து 2.13 லட்சம் பேருக்கு பயிற்சி அளித்தது. இந்த வழக்கில் சந்திரபாபு வெளியில் வருவார். டிசைன் டெக் இளைஞர்களை மேம்படுத்துவதில் அதன் சேவைகளை அங்கீகரித்து ஒரு விருது கூட வழங்கப்பட்டது” என்றார். 


எச்சரிக்கும் பாலையா:


தொடர்ந்து பேசிய அவர், “பதியப்பட்ட எப்.ஐ.ஆரில் சந்திரபாபு நாயுடு பெயர் இல்லை. அநீதிக்கு எதிராக சட்டரீதியாக போராடுவோம். கிரிமினல் வழக்குகளுக்கு நாங்கள் பயப்படவில்லை. தெலுங்கு தேசம் கட்சி மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது, அதை தொடர்ந்து செய்யும். ஒரு வாய்ப்பு என்ற பெயரில் ஆட்சியை பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி, வரி என்ற பெயரில் மக்களின் முதுகை உடைத்து வருகிறார். இளைஞர்கள் ஜெகனையும் அவரது சதித்திட்டங்களையும் ஆராய்ந்து வருகின்றனர், வரும் நாட்களில், நாம் சுவாசிக்கும் காற்றுக்கு கூட அவர் வரி விதிக்கலாம். அடுத்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.


சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். விரைவில், நான் சென்று அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் சந்திப்பேன். இங்கு குரைக்கும் நாய்கள் குறைவாகவே உள்ளது. அவை எல்லை மீறினால், அவற்றில் எதையும் நான் விட்டுவைக்க மாட்டேன். இந்த சதியை ஒழிக்கவே இப்போது வந்திருக்கிறேன். சேர்ந்து போராடுவோம், வலிமையைக் காட்டுவோம். ஜெகனின் ஒவ்வொரு அட்டூழியத்துக்கும் பின்விளைவுகள் இருக்கும்” என எச்சரித்தார்.