சனாதன தர்மம் குறித்து  காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மவுனம் காப்பது ஏன் என பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். 


இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறியிருப்பது திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன தர்மம் என்ற ஒற்றை வார்த்தையைப்பற்றிதான். 


சனாதன தர்மம் டெங்கு, மலேரியா போன்றது. அது ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி பேசினார். ஆனால் அவர் இனப்படுகொலை செய்ய தூண்டுவதாக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆங்காங்கே போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு உள்ளூர் பாஜக பிரமுகர் முதல் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வரை கருத்து தெரிவிக்காத பாஜகவினரே இல்லை எனும் அளவுக்கு இந்த விவகாரம் மாறியுள்ளது. 


இதனிடையே விளக்கம் கொடுத்த உதயநிதி “சாதிவேறுபாடு, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இல்லாத அனைத்து மதங்களையும் நாங்கள் மதிக்கிறோம். நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை” என ஒரே குறிக்கோளாக நிற்கிறார். ஆனால் உதயநிதியின் பேச்சு குறித்து பிரதமர் கருத்து தெரிவித்ததாக சில தகவல்களும் கசிந்தன. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதியின் முழு பேச்சையும் கேட்காமல் ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு பேசுவது அழகல்ல” என கடிதமே எழுதினார். 


ஏற்கெனவே பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  I.N.D.I.A. என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. ஆனால் அந்த கூட்டணியை உடைக்க பல்வேறு வியூகங்களை பாஜவினர் வகுத்து வருகின்றனர். அதில் ஒன்றாகத்தான் இந்த சனாதன தர்மம் சர்ச்சையையும் பாஜகவினர் எழுப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், I.N.D.I.A. கூட்டணியை பிரிக்க அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்குவதே முக்கிய குறிக்கோளாக பாஜக வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில், சனாதன தர்மத்தை எதிர்ப்பது என்பது I.N.D.I.A கூட்டணியின் திட்டத்தில் ஒரு பகுதி என்பது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மவுனம் காப்பதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் என முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவி சங்கர் பிரசாத், குற்றம் சாட்டியுள்ளார். 


இதுகுறித்து அவர் கூறுகையில், “சனாதன தர்மத்தை எதிர்ப்பதே I.N.D.I.A கூட்டணியின் நோக்கம் என திமுக தலைவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் திமுகவின் சொல்வது  I.N.D.I.A கூட்டணியின் திட்டத்தில் இல்லை என தீர்மானம் கொண்டுவர நாங்கள் வலியுறுத்துவோம். திமுக தனது விமர்சனத்தை நியாயப்படுத்த சனாதன தர்மத்தை இந்துக்களிடையே ஜாதி பாகுபாடு இருப்பதாக கூறி பரப்பி வருகிறது. ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. சாதி மற்றும் சமூகப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஒருவர் பக்தியுடன் கடவுளை அடைய முடியும் என்று சனாதன தர்மம் கூறுகிறது” என்றார்.


இதனிடையே காங்கிரஸ் அனைத்து மதங்களையும் மதிப்பதாக கூறிவருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திமுகவில் உள்ளவர்கள் முதல் ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி போன்ற கட்சிகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை சனாதன தர்மம் மற்றும் இந்து மதத்துடன் தொடர்புடைய புனித நூல்களை விமர்சிப்பதில் குரல் கொடுத்து வரும் நிலையில், மற்ற மதங்களையும் அவற்றின் புனிதங்களையும் விமர்சிக்க அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார் ரவி சங்கர் பிரசாத்.


மேலும் “ சோனியா காந்தி ஒரு கட்சியின் மிகப்பெரிய தலைவர் நீங்கள். உங்களுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது.  இந்த விவகாரத்தில் நீங்கள் மௌனம் காப்பது தேசத்தை கவலையடையச் செய்கிறது. வாக்குகளைப் பெறுவதற்கு நீங்கள் எவ்வளவு கீழ்நிலைக்குச் செல்வீர்கள், எவ்வளவு காலம் செல்வீர்கள்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.