கர்நாடகா மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதாவது அங்குள்ள 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் 57 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 9 வார்டுகளில் இடைத்தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின.
அதன்படி இந்தத் தேர்தலில் தொடக்க முதலே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் இடையே பல இடங்களில் கடும் போட்டி நிலவியது. கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அங்கு அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியை பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
மொத்தமாக 1187 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சுமார் 500 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து பாஜக 434 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் குமரசாமியின் மதசார்ப்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெறும் 45 இடங்களை மட்டும் கைப்பற்றியது. குறிப்பாக இந்தத் தேர்தலில் தற்போதைய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் தொகுதியான சிக்காவியில் காங்கிரஸ் கட்சி 14 வார்டுகளில் வெற்றியை பெற்றுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வெற்றி தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வர் சித்தராம்மையா,”காங்கிரஸ் கட்சி 500 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பல இடங்களில் இரு கட்சிகளும் சமமான இடங்களை வென்றுள்ளன. ஆகவே தற்போது மீண்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் அலை தொடங்கியுள்ளது” எனக் கூறியிருந்தார்.
முன்னாள் முதல்வரின் கருத்திற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை,”காங்கிரஸ் கட்சி ஒரு சில இடங்களை மற்றும் கைப்பற்றி விட்டு பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக கூறி வருகிறது. ஊரக உள்ளாட்சிகளில் காங்கிரஸ் கட்சியைவிட நாங்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். மேலும் பல்வேறு முக்கிய இடங்களில் நாங்கள் அதிக இடங்களை வென்றுள்ளோம். எனவே 2023ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:புலியோடு நடந்த சுவையான சம்பவம்.. ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட வைரல் வீடியோ !