பாதுகாப்பு படையினருக்கு வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (AFSPA) நாகாலாந்தில் மேலும் ஆறும் மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த சட்டத்தை நாலாந்தில் இருந்து திரும்பப் பெறுவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசின் தற்போதைய முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நாகலாந்து உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (AFSPA)நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்களை வாரண்ட் இன்றி கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் யாரையும் சோதனையிடவும் பொருட்களைக் கைப்பற்றவும் முடியும். ஒரு ராணுவ வீரர் பொதுமக்கள் யாரையாவது தவறுதலாகவோ தவிர்க்க முடியாமலோ சுட்டுக் கொன்றுவிட்டால், இந்தச் சட்டம் அவரைப் பாதுகாக்கும்
இந்த மாத தொடக்கத்தில் (டிசம்பர் 4), நாகாலாந்தில் மியான்மர் எல்லையருகே உள்ள மோன் மாவட்டத்தையொட்டிய கிராமத்தில் நாகா தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் சோதனையில் மேற்கொண்டனர். இந்நேரத்தில் பணியில் இருந்த வீரர்களுக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் சுட்டனர். இதில் பொதுமக்கள் 6 பலியாகினர். இவர்கள் அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள் ஆவார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊருக்கு வந்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்கள். தங்களது கிராமங்களுக்கு செல்ல காத்திருந்த போதுதான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய மக்கள் கட்சித் தலைவரான மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, இந்த சட்டத்தை திரும்பப் பெறும்படி வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று நாகலாந்து முதலமைச்சர் நெய்பி ரியோவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "பதற்றம் நிறைந்த பகுதி என்று கூறி, ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு நாகலாந்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால் இங்குள்ள அனைத்து ஆயுதக்குழுக்களும் சண்டை நிறுத்தத்தை அறிவித்து, அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகின்றன. அப்படி இருக்கையில் எதற்காக இந்த சட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்த வேண்டும்?" என்று தெரிவித்தார்.
முன்னதாக, நாகாலந்து துப்பாக்கிச் சூடு தொடர்பாக மக்களவையில் பேசிய அமைச்சர் அமித்ஷா, ''நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவம் மன்னிப்பு கோரியுள்ளது. அப்பாவி மக்கள் உயிரிழப்பிற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவிக்கிறது. நாகாலாந்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும், அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் நேராமல் கவனத்துடன் செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாநில அரசு, மத்திய அரசின் பிரதிநிதிகள் மற்றும் ராணுவப் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாகாலாந்து கள நிலவரத்தை உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. அங்கு சகஜ நிலையைக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவத்திற்கு என்ன காரணம் என்று முழு விசாரணை நடத்தப்படும். விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்