இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும்,  ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவருகிறார்.


2020ஆம் ஆண்டின்படி அவருக்கு 104.7 பில்லியன் சொத்து மதிப்பு எனவும், கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு 21.4 சதவீதம் அதிகரித்துள்ளது.


இந்த சூழலில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் அவரது வாரிசுகளுக்கு கைமாறுவது குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியானாலும்  அதுகுறித்து எந்த கருத்தையும் அவர் கூறாமல் இருந்தார்.


இந்நிலையில் முகேஷ் அம்பானியின் தந்தையும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனருமான திருபாய் அம்பானியின் பிறந்தநாளான டிசம்பர் 28ஆம் தேதி  நிலையன்ஸ் குடும்ப தின விழாவில் முகேஷ் அம்பானி கலந்துகொண்டார். அப்போது பேசிய அம்பானி ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை தனது வாரிசுகளிடம் ஒப்படைக்க அவர் தயாராகியிருப்பதை தன் பேச்சில் உணர்த்தினார். விழாவில் பேசிய முகேஷ் அம்பானி, “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) வரும் ஆண்டுகளில் உலகின் வலிமையான மற்றும் புகழ்பெற்ற இந்திய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாக மாறும். சுத்தமான மற்றும் பசுமை எரிசக்தி துறை மற்றும் சில்லறை மற்றும் தொலைத்தொடர்பு வணிகம் முன்னெப்போதும் இல்லாத உயரத்தை எட்டியுள்ளது.


பெரிய கனவுகள் மற்றும் சாத்தியமற்றதாக தோற்றமளிக்கும் இலக்குகளை அடைவதே சரியான நபர்களையும் சரியான தலைமைத்துவத்தையும் பெறுவதாகும். ரிலையன்ஸ் இப்போது ஒரு முக்கியமான தலைமை மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்பாட்டில் உள்ளது. நான் உள்பட மூத்த தலைமுறையிடமிருந்து அடுத்த இளம்தலைமுறைக்கு இந்த மாற்றமானது செல்ல வேண்டும்.


நாம் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும், அவர்களை இயக்க வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.


ஆகாஷ், இஷா மற்றும் அனந்த் ஆகியோர் அடுத்த தலைமுறை தலைவர்களாக ரிலையன்ஸ் நிறுவனத்தை இன்னும் பெரிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை”என்றார்.


இதன் மூலம் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைமை பொறுப்பு முகேஷ் அம்பானியின் வாரிசுகளுக்கு செல்லவிருப்பது ஏறத்தாழ உறுதியாகியிருப்பதாகவே தெரிகிறது.


இருப்பினும்,  இந்த மாற்றம் எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும், எவ்வாறு திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது குறித்த தகவலை முகேஷ் அம்பானி கூறவில்லை.


முகேஷ் மற்றும் நீதா அம்பானி தம்பதியருக்கு இஷா அம்பானி என்ற மகளும், ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இவர்கள் ஏற்கெனவே ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். அதன்படி இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இடம்பெற்றிருக்கிறார். அதேபோல்,  ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குநராகவும், ஆனந்த் அம்பானி 2020ஆம் ஆண்லிருந்து ஜியோ பிளாட்ஃபார்ம்ஸில் கூடுதல் இயக்குநராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.