கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்தினர் 6வது சம்பள குழுவின் பரிந்துரையின்படி, ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அரசு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.


இந்த நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கர்நாடக சாலைப்போக்குவரத்து கழகம், கர்நாடக சாலைப்போக்குவரத்து கழக பணியாளர்கள் கழகம் உள்பட மாநிலத்தின் முக்கிய போக்குவரத்து பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.




இதன்படி, இன்று முதல் கர்நாடகாவில் அரசு போக்குவரத்து பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில், இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனியார் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தற்காலிகமாக பேருந்துகளை இயக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ரயில்களின் சேவையை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது,


போக்குவரத்து பணியாளர்களின் வேலைநிறுத்தத்தால் தனியார் வாடகை கார், ஆட்டோக்கள் அதிகளவில் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.