கர்நாடக பள்ளிக் கூடங்களில் மீண்டும் தண்ணீர் இடைவேளை அமலுக்குக் கொண்டு வரப்படவுள்ளது


90s கிட்ஸுக்கு பள்ளிக்கூடத்தில் ரீசெஸ் பெல் ஒன்று நன்கு பரிச்சியமானதாக இருந்தது. ஒரு 10 நிமிட இடைவேளை தான் விடுவார்கள். அதில் ஊர் கதை உலகக் கதை பேசி, சட்னி ஊசிப் போயிரும்னு சட்னியோட ரெண்டு இட்லியை லபக்குவது, புக் கிரிக்கெட் விளையாடுவது, தண்ணீர் குடித்துவிட்டு பாத்ரூம் போயிட்டு வரதுன்னு எல்லாம் முடிஞ்சிரும். காலப்போக்கில் 10 நிமிட ரீசெஸ் பெல் காணாமல் போனது. அப்புறம் மாரல் சயின்ஸ் பீரியட்கள் கடன் வாங்கப்பட்டு கணிதம் கற்பிக்கப்பட்டன. அப்புறம் அது முற்றிலுமாக நீக்கப்பட்டது. அதன் பின்னர் கேம்ஸ் பீரியட், கிராஃப்ட் பீரியட் என எல்லாவற்றிலும் கைவைத்துவிட்டனர் பாட ஆசிரியர்கள். இப்படியிருக்க தண்ணீர் குடிக்காமல் நீர்ச்சத்து குறைபாடு, விளையாடாமல் ஒபீசிட்டி எனப்படும் உடல்பருமன், சரியான நேரத்தில் இயற்கை உபாதைகளை கவனிக்காமலேயே சிறுவயதில் சிறுநீரகப் பிரச்சனை என வண்டி வண்டியாக நோயை வாங்கி வைத்திருக்கிறது இந்த குழந்தைகள் உலகு. 


இந்நிலையில் கர்நாடக பள்ளிக் கூடங்களில் மீண்டும் தண்ணீர் இடைவேளை அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நீர்ச்சத்து குறைப்பாட்டுடன் குழந்தைகள் மருத்துவமனைக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.


கேரளா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் தான் இந்தத் திட்டம் முதலில் அமலாகின. இதன் வெற்றியைக் கண்டு இப்போது கர்நாடகாவிலும் அமலுக்குக் கொண்டு வரப்படுகிறது. 2019 லேயே இது கர்நாடகாவில் அறிவிக்கப்பட்டாலும் பெரிதாக பள்ளிகள் பின்பற்றவில்லை. ஆனால் தற்போது பள்ளிகளுக்கு இதனைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


பள்ளியில் ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். அப்போது குழந்தைகள் தண்ணீர் அருந்த ஊக்குவிக்கப்படுவார்கள். கொரோனாவுக்குப் பின்னர் பள்ளிகள் முழு நேரம் இயங்க ஆரம்பித்த பின்னர் தண்ணீர் இடைவேளை வழக்கொழிந்து போன நிலையில் தற்போது அது மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு, தனியார் என எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்புக்கு பெற்றோர், பள்ளிக் குழந்தைகள், மருத்துவர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எப்போதும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது பல்வேறு உபாதைகளில் இருந்தும் காப்பாற்றும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.