கேரள அரசுக்கும் அம்மாநில ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் கேரள அரசு தொடர் பின்னடைவாக சந்தித்து வருகிறது.


கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசு நியமித்திருந்தது. ஆனால், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தன்னுடைய பொறுப்பு என ஆளுநர் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.எஸ். ராஜஸ்ரீயின் நியமனம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. 


இதை தொடர்ந்து, துணை வேந்தர்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஆளுநர் கெடு விதித்திருந்தார். இச்சூழலில், ஆளுநருக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் துணை வேந்தர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


அதில், நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்கும் வரை உத்தரவிடக்கூடாது என ஆளுநருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.


 






கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக டாக்டர் ஜான் நியமனம் செய்யப்பட்டதை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள தலைமை நீதிபதி மணிகுமார், நீதிபதி ஷாஜி பி. சாலி ஆகியோர் அடங்கிய அமர்வு, "துணை வேந்தரை நியமிப்பதற்காக அமைக்கப்பட்ட தேர்வு குழு மற்றும் அதன் பரிந்துரைகள் சட்ட விரோதமானது" என தெரிவித்தது.


கேரள முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருப்பவர் கே.கே. ராகேஷ். இவரின் மனைவி பிரியா வர்கீஸ். இவர், பல்கலைக்கழகம் ஒன்றில் இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார். தெரிந்தவருக்கு இணை பேராசிரியர் பதவி வழங்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அந்த நியமனத்தை கேரள அரசு ரத்து செய்தது.


மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இணைப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க எட்டு ஆண்டுகள் ஆசிரியர் அனுபவம் தேவை என்றும் அவரது ஆசிரியர் அனுபவம் குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளது.


பல்கலைக்கழக ஆய்வுக் குழு அதை எப்படி கவனிக்கவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மலையாள இணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட பிரியா வர்கீஸுக்கு போதிய ஆசிரியர் அனுபவம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.  


இதை தொடர்ந்து, ப்ரியா வர்கீஸ் தான் பிஎச்டி படிக்கும் போது மாணவர்களுக்கு கற்பிக்கவில்லை என்று ஒப்புக்கொண்டார். இன்று நீதிமன்ற தீர்ப்புக்கு பதிலளித்த அவர், "நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். சட்ட வல்லுனர்களுடன் முடிவு செய்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு செய்வேன்" என்றார்.