தற்போது, இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு மூன்று வகை ஆட்சேர்ப்பு வழிமுறைகள் உள்ளன. முன்னதாக, நிரந்தர கமிஷன், குறுகிய கால சேவை கமிஷன் வழியாக மட்டுமே ஆட்கள் சேர்க்கப்பட்டு வந்தது. சமீபத்தில்தான், அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.


இந்த மூன்றுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. அதாவது, நிரந்தர கமிஷன் என்றால் ஓய்வு வரையில் ராணுவத்தில் பணியாற்றலாம். இரண்டாவதாக, குறுகிய கால சேவை கமிஷன் என்றால் 10 ஆண்டுகள் வரை, ராணுவத்தில் பணியாற்றலாம். ஆனால், அதில் 4 ஆண்டுகள் வரை பணி நீட்டிப்பு செய்யப்படலாம். மூன்றாவதாக, அக்னிபாத் மூலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணியாற்றலாம்.


குறுகிய கால சேவை கமிஷனில் பணிக்காலம் முடிந்தவுடன் அவர்கள் நிரந்தர கமிஷனில் சேரலாம். ஆனால், ஆண்களை நிரந்தர கமிஷினில் பணி அமர்த்துவது போல பெண்கள் பணி அமர்த்தப்படவில்லை. 


இதற்கு மத்தியில், குறுகிய கால கமிஷினில் பணியாற்றி வந்த 32 பெண் ராணுவ வீரர்கள் நிரந்தர கமிஷனில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. இதை தொடர்ந்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது, அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.


 






இந்திய விமானப் படையில் நிரந்தர கமிஷினில் சேர்வதற்காக கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் போராடி வந்த 32 பெண் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "நிரந்தர கமிஷினில் அந்த பெண்களை சேர்த்து கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது. வயது வரம்பைத் தாண்டிய 32 பெண் அதிகாரிகள், குறைந்தபட்சம் தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.


பெண் ராணுவ அதிகாரிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, வழக்கறிஞர்கள் அர்ச்சனா பதக் தவே மற்றும் சித்ரங்தா ராஸ்ட்ராவாரா ஆகியோர் ஆஜராகினர். குறுகிய கால சேவை கமிஷனில் பணியாற்றிய பெண்களை நிரந்தர கமிஷனில் பரீசிலிக்க வேண்டும் என பபிதா புனியா வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வழக்கறிஞர்கள் மேற்கோள்காட்டி வாதம் முன்வைத்தனர்.


மனுதாரர்களில் மூன்று பெண்கள், தேசத்திற்கு சேவை ஆற்றுகையில் கணவனை இழந்தவர்கள். அவர்களும் குறுகிய கமிஷனில் அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.