கர்நாடகாவின் குடகு மாவட்டம் முள்ளூரைச் சேர்ந்தவர் ஆசிரியர் சதீஷா. அந்தப் பகுதியின் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கே பெருந்தொற்று கால ஆன்லைன் வகுப்புகளைப் பிள்ளைகளுக்குத் தொடர்ச்சியாக வழங்குவதற்கான புதிய ஐடியா ஒன்றை உருவாக்கி இருக்கிறார் அவர். ஒரு உயரமான மாமரத்தின் உச்சியில் மரம், மூங்கில், புற்களால் ஆன அறை ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.




நிலத்திலிருந்து 20 அடி உயரத்தில் இந்த அறை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த உயரத்தில் அறை இருப்பதால்  நெட்வொர்க் பிரச்னைகள் மற்றும் சிக்னல் பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைத்துள்ளது. சோமவார்ப்பேட்டை பகுதியிலிருந்து உள்ளே 20 கிமீ தொலைவில் உள்ள இந்தக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் பல கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


சதீஷா அந்தப் பகுதியின் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியராக உள்ளார். ஆனால் கொரோனா பெருந்தொற்று பிள்ளைகளின் படிப்பை பாதித்தது.அதுவும் இது கிராமப்புறங்களில் குறிப்பாக பழங்குடிப் பகுதிகளில் முதல்தலைமுறைக் கல்வியைப் பெரிதும் பாதித்தது. பெற்றோர் ஆதரவு மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு நடுவே அவர்கள் படிக்கவருவதே அரிதாக நிகழும்போது இதுபோன்ற பிரச்னைகள் அவர்களை இன்னும் பின்னுக்குத் தள்ளும். அதனால் லாக்டவுனிலும் அவர்களுக்குக் கல்வி தர சதீஷா ஆங்கிலம், கன்னடம், கணிதம் என பாடங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.ஆனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு சிக்னல் கிடைப்பது பெரும் பிரச்னையாக இருந்தது. அதனால் மரத்தின் மீது அறை உருவாக்கினார் சதீஷா. அறையை உருவாக்க இரண்டு மாதங்கள் ஆனது.
மழைக்காலத்தில் அந்த அறை சேதமடையாமல் இருக்க தார்பாலின் கொண்டு மழை நீர் நுழையாமல் இந்த அறை உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கே மொபைல் வைப்பதற்கான ஸ்டாண்டு, டார்ச் லைட் உள்ளிட்ட வ்சதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வாட்சப் சேலஞ் எனப் பெயர் வைத்து ஒரு குழுவையும் உருவாக்கி பிள்ளைகளுக்கு எனத் தனியான வினாத்தாள்களை உருவாக்கியும் பாடம் எடுத்து வருகிறார் சதீஷா.