இந்திய விமானப் படைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூபாய் 59 ஆயிரம் கோடி மதிப்பில் ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடக்கம் முதல் எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக, அந்த நாட்டின் மீடியாபார்ட் என்ற செய்தி நிறுவனம் மேற்கொண்ட புலன் விசாரணையில், ரபேல் ஒப்பந்தத்திற்காக இந்தியாவில் உள்ள தரகருக்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக அளிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது.


மேலும், பிரான்சில் உள்ள ஷெர்பா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு அரசை வலியுறுத்தியது. இதையடுத்து, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்கு அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தனி நீதிபதியையும் அந்த நாட்டு அரசு நியமித்துள்ளது.




பிரான்ஸ் அரசு ரபேல் போர் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரிக்க தனி நீதிபதியை நியமித்ததை அடுத்து, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது தற்போது தெளிவாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து நீதிவிசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தி ஆகியோரின் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. இதுதொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது காங்கிரஸ் – பா.ஜ.க. மோதல் கிடையாது. இது நாட்டின் பாதுகாப்பு விவகாரம் என்று கூறியுள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக நிரூபர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பித்பத்ரா, ராகுல்காந்தியின் நடவடிக்கையை பார்க்கையில் ரபேலைத் தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்திற்கு எதிரான போட்டி நிறுவனங்களின் கைப்பாவையாக அவர் பயன்படுத்தப்படுகிறார் என்று கூறினால் அது மிகையல்ல. இந்த விவகாரத்தில் அவர் தொடக்கம் முதல் பொய் கூறி வருகிறார். அவர் ஏஜெண்டைப் போல அல்லது போட்டி நிறுவனத்தில் இருக்கும் நபர் போல நடந்து கொள்கிறார்.





ராகுல்காந்தியும், அவரது கட்சியினரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருவது நாட்டை வலுவிழக்கச் செய்யும் முயற்சி. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பொய் மற்றும் தவறான தகவல்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது. பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறிய புகாரை பற்றி விசாரிக்கவே பிரான்ஸ் அரசு தனி நீதிபதியை நியமித்துள்ளது. இதை ஊழல் விவகாரமாக பார்க்க கூடாது என்றார்.


கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காத்திருந்தன. இந்த சூழலில், வரும் 19-ந் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு விவகாரம், பிரான்ஸ் அரசு தனி நீதிபதியை நியமித்துள்ளது குறித்து காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளது.


கடந்த மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியில் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் எச்.ஏ.எல். மற்றும் டசால்ட் நிறுவனம் இடையே தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய ஒப்பந்தத்திற்கு பதிலாக ரிலையன்ஸ் மற்றும் டசால்ட் நிறுவனம் இடையே ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தானது. நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்ததற்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.