கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி, ஒரே நாளில், மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 8 லட்சத்து 34 ஆயிரத்து 620 வழக்குகளுக்கு தீர்வு கண்டு கர்நாடக மாநில சட்ட சேவை ஆணையம் சாதனை படைத்துள்ளது. லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம், பிரச்னைகளை தீர்த்து வைக்கும் மாற்று மன்றமாக திகழ்கிறது.


இந்த ஆண்டு ஜூன் மாதம், மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 077 வழக்குகளைத் தீர்த்து, கர்நாடக மாநில சட்ட சேவை ஆணையம் சாதனை படைத்திருந்தது.


திங்கள்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து பேசிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியும் கர்நாடக மாநில சட்ட சேவை ஆணையத்தின் தலைவருமான வீரப்பா, "தீர்வு காணப்பட்ட 8,34,620 வழக்குகளில் 1,53,024 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மேலும் 6,81,596 வழக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மன்றங்களின் முன் வழக்கு விசாரணைக்கு முந்தைய நிலையில் உள்ளன" என்றார்.


சமூகவலைதளம் மூலம் மனுதாரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக கவலை தெரிவித்த அவர், "வருவாய் வழக்குகள் போன்ற சிறிய குற்றங்கள் மக்கள் நீதிமன்றத்தின் கீழ் வராது. மக்கள் நீதிமன்றத்தின் மாபெரும் வெற்றியைக் கண்டு பொறாமை கொண்ட சிலர், மனுதாரர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.


இருப்பினும், சட்ட சேவை ஆணைய சட்டம், பிரிவு 19 இன்படி, போக்குவரத்து வழக்குகள், வருவாய் வழக்குகள் போன்ற விசாரணைக்கு முந்தைய நிலையில் உள்ள வழக்குகளை எடுத்துக்கொண்டு மக்களுக்கு எங்கள் சேவையைச் செய்கிறோம். 


மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 890 சிறு போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை தீர்ப்பதன் மூலம் மாநில அரசின் கருவூலத்திற்கு 14.35 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் ஓய்வூதியம் போன்ற 94,446 வருவாய் வழக்குகள் விசாரணைக்கு முந்தைய வழக்குகளாக எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.


கர்நாடக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள 80 வழக்குகள் தீர்க்கப்பட்டு, இழப்பீடாக ரூ.48.40 லட்சம் வழங்கப்படுகிறது. இதேபோல், நுகர்வோர் மன்றங்களில் நிலுவையில் உள்ள 136 வழக்குகள் மொத்தம் ரூ.3.01 கோடிக்கு தீர்வு காணப்பட்டன.


1,380 குடும்ப தகராறு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன. பிரிந்திருந்த 120 தம்பதிகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒன்றாக இணைந்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண