கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அந்த மாநிலத்திற்கு வந்தார். 






அந்த மாநிலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று சாலை வழியே வாகனத்தில் பொதுமக்களை சந்தித்துக்கொண்டே சென்றார். அப்போது, அவருக்கு பலத்த பாதுகாப்பை காவல்துறையினரும், அவரது பாதுகாவலர்களும் அளித்துக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக அவரது வாகனம் அருகே ஆர்வத்துடன் ஓடோடி வந்தார். அப்போது, அந்த இளைஞர் பிரதமர் மோடியை நெருங்காமல் இருப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை மடக்கிப்பிடித்து அப்புறப்படுத்தினர். பிரதமர் மோடியின் பாதுகாப்பில் தொடர்ந்து இதுபோன்ற குளறுபடிகள் இருப்பதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 


இந்த சம்பவம் குறித்து பெங்களூருவின் துணை டிஜி.பி அலோக் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ஊடகங்களில் வரும் செய்திகளைப் போல் பிரதமரின் பாதுகாப்பில் எந்தவிதமான குளறுபடியும் ஏற்படவில்லை. பிரதம்ரை நெருங்க முயன்ற நபரை நான் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த மற்ற காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளோம். அதேபோல், அவரை கைது செய்து விசாரணையும் நடத்தி வருகிறோம் என கூறிப்பிட்டுள்ளார். 


இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் கர்நாடகாவுக்கு பிரதமர் சென்றிருந்தபோது இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது.  ஹூப்பள்ளியில் நடந்த சாலைக் கண்காட்சியின் போது இளைஞர் போலீஸ் பாதுகாப்புகளை மீறி பிரதமரின் காரை நோக்கி ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கர்நாடகாவில் மே 2023-க்குள் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று முன்னதாக, நிலையான ஆட்சிக்கு கட்சிக்கு முழுப்பெரும்பான்மை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். 


மேலும், வேகமான வளர்ச்சி என்பது காலத்தின் தேவை என்று வலியுறுத்திய அவர், "சூழ்ச்சி அரசியலில்" இருந்து மாநிலத்தை வெளியே கொண்டு வர கர்நாடக மக்கள் உதவ வேண்டும் என்றும் பேசியுள்ளார். மாநிலத்தை வளர்ச்சியடைந்த இந்தியாவின் உந்து சக்தியாக மாற்ற பாஜக விரும்புகிறது என அவர் குறிப்பிட்டு பேசினார்.