கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. பெரும்பாலும் மே மாததிற்குள் தேர்தல் நடத்தப்பட்டுவிடும். இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வளர்ச்சி பணி திட்டங்கள்:
அதேபோல, ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை பிரதமர் மோடி அங்கு திறந்து வைத்து வருகிறார். கடைசியாக, பெங்களூரு - மைசூர் விரைவுச்சாலையையும் தார்வாட்டில் ஐஐடி வளாகத்தையும் திறந்து வைப்பதற்காக மோடி கர்நாடகா சென்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று சிக்கபல்லாபூரில் உள்ள ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை மோடி திறந்து வைத்தார்.
பின்னர், பேசிய அவர், "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் போது, நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் இந்தியா எப்படி வளர்ச்சியடையும் என்று பலர் கேட்கிறார்கள். எத்தனையோ சவால்கள், நிறைய வேலைகள் உள்ளன. குறுகிய காலத்தில் எப்படி முடியும்? ஒவ்வொருவரின் முயற்சியும்தான் இந்த கேள்விக்கு ஒரே பதில்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை:
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு அனைவரின் பங்களிப்பையும் பாஜக அரசு வலியுறுத்துகிறது. 'சப்கா பிரயாஸ்' மூலம் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது" என்றார்.
சுகாதார கட்டமைப்பு குறித்து பேசிய அவர், "இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிப்பதில் எங்கள் முயற்சி உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளோம்" என்றார்.
மெட்ரோவில் பயணம்:
இதையடுத்து, கிருஷ்ணராஜபுராவில் இருந்து ஒயிட்ஃபீல்ட் வரை போடப்பட்டுள்ள மெட்ரோ ரயிலை (காடுகோடி) பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், மெட்ரோ ரயிலில் மக்களுடன் மக்களாக மோடியும் பயணம் செய்தார். இதனைத்தொடர்ந்து, தாவாங்கரேயில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார். மொத்தம் 10 லட்சம் பேர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும், வரும் ஏப்ரல் 9ஆம் தேதி, பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 124 பேர் கொண்ட பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது காங்கிரஸ். பாஜகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. டெல்லி, பஞ்சாப், குஜராத்தை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.