சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தானின் தீவிர ஆதரவாளரான அம்ரித் பால்சிங்கை கைது செய்ய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரிஸ் பஞ்சாப் டி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ள இவர், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார். 


அம்ரித்பால் சிங்கை கைது செய்ய ஆபரேஷன்:


இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  அம்ரித்பால்சிங்கை கைது செய்ய எடுத்து வரும் ஆபரேஷனின் ஒரு பகுதியாக தொடர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், அம்ரித்பால் சிங், மாறுவேடத்தில் இருப்பது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையிடம் சிக்காமல் ஜாக்கெட் மற்றும் பேன்ட் அணிந்தபடி அவர் சாலையில் சுற்றி திரிவது அந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


வழக்கமாக, அவர் பாரம்பரிய சீக்கிய உடைகளைதான் அணிந்திருப்பார். ஆனால், தற்போது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கண்ணாடி அணிந்து கொண்டு காவல்துறையை அலையவிட்டு வருகிறார்.


சிசிடிவியில் பகீர்:


இந்த சிசிடிவி காட்சி தற்போது காவல்துறையிடம் சிக்கியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி, அமிர்தசரஸில் கடந்த மார்ச் 20ஆம் தேதி எடுக்கப்பட்டது. அங்குள்ள அவரின் உறவினர் வீட்டில் அம்ரித் பால் சிங் தலைமறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. அமிர்தசரஸில் இருந்து ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்ராவுக்கு சென்று, அங்கிருந்து அவர் டெல்லிக்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


இன்று காலை முதல், டெல்லி காஷ்மீர் கேட்டில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையத்தில் டெல்லி மற்றும் பஞ்சாப் போலீஸ் குழுக்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடும்போது அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு பெண்ணின் வீட்டை விட்டு அம்ரித் பால்சிங் வெளியேறுவதும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. 


தப்பியோட்டம்:


இதுகுறித்து பஞ்சாப் தலைமை காவல்துறை ஆய்வாளர் சுக்செயின் சிங் கில் கூறுகையில், "அம்ரித் பால்சிங் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து மன்பிரீத் சிங், குர்தீப் சிங், ஹர்ப்ரீத் சிங் மற்றும் குர்பேஷ் சிங் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 


315 துப்பாக்கி, ஒரு வாக்கி-டாக்கி மற்றும் சில வாள்களும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. காவல்துறை அவரை துரத்திய போது, அம்ரித் பால் சிங் குருத்வாராவிற்குச் சென்று, அங்கு தனது ஆடைகளை மாற்றியுள்ளார். சட்டை மற்றும் கால்சட்டை அணிந்து கொண்டு மூன்று உதவியாளர்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர்.


 






அடையாளம் தெரியாமல் இருக்கும் வகையில் அவர் தனது தோற்றத்தை மாற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.