கர்நாடக மாநிலம், உடுப்பியில் கடந்த ஃபிப்ரவரி மாதம் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கின. தொடர்ந்து இந்தப் பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாய் வீரியமடைந்த நிலையில், இஸ்லாமிய மாணவிகளைக் கண்டித்து இந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு காவித் துண்டு அணிந்து வந்தனர்.


பள்ளி கல்லூரிகளில் மத அடையாளங்களுக்கு தடை


தொடர்ந்து இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து தொடர் போராட்டங்கள், வன்முறைகள் ஏற்பட்டன. இதனால் மாநிலத்தில் ஒரு வாரத்துக்கு மேல் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மத அடையாள ஆடைகள் அணிந்து வர கர்நாடக அரசு தடை விதித்தது.


இதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றம் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடைகள் அணியத் தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும் என உத்தரவிட்டது.


மாணவிகள் இடைநீக்கம்


இந்த நிலையில் தற்போது ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலை ஓங்கத் தொடங்கி உள்ளது. அந்த வகையில், தட்சிண கன்னடா மாவட்டம், உப்பினங்கடியில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த ஏழு இஸ்லாமிய மாணவிகளை கடந்த வாரம் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.


இதனைக் கண்டித்து முன்னதாக அதே கல்லூரியில் படிக்கும் 24 இஸ்லாமிய மாணவிகள்  'ஹிஜாப், எங்கள் உரிமை, எங்களை ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும்” எனக் கோரி வகுப்பறைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், போராட்டம் நடத்திய 24 இஸ்லாமிய மாணவிகளை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


தமிழ்நாட்டில் தலைதூக்கும் ஹிஜாப் பிரச்னை


இதேபோல் முன்னதாக தமிழ்நாட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில்  ஹிஜாப் அணிந்து அரசு பள்ளிக்கு தேர்வெழுத வந்த மாணவர்களை தேர்வு மையக் கண்காணிப்பாளர் தடுத்த நிகழ்வு பரபரப்பைக் கிளப்பியது.


இந்நிகழ்வுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண