2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அனைத்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், ஆளும் பாஜக கட்சிக்கு எதிராகவும் அமைந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை கொண்டாடுவதை விட, முதலமைச்சர் பதவி யாருக்கு கொடுப்பது என்ற கேள்விகுறியோடு சுற்றி வருகிறது. 


கர்நாடக முதலமைச்சர் யார் என்பது இன்று அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. யார் அடுத்த முதலமைச்சர் என்ற முடிவை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோரில் யாரோ ஒருவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லப்பட்டாலும் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அதிகாரம் அளித்து காங்கிரஸ் கட்சி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. 


டெல்லி பறக்கும் சித்தராமையா:


கர்நாடகாவில் 2வது முறையாக முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இன்று மதியம் டெல்லி செல்கிறார். டெல்லி சென்றபிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன கார்கேவுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தநிலையில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற டி.கே. சிவகுமார் டெல்லி பயணம் குறித்து தான் எதுவும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “ இன்று எனது  பிறந்தநாள். இங்கு நான் செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. டெல்லி செல்வது குறித்து நான் எதுவும் முடிவு செய்யவில்லை. முதலமைச்சர் பதவி குறித்து மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்பேன். எனக்கு எந்த வேலை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் ” என்றார். 






தொடர்ந்து டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “ கடந்த 20 வருடங்களாக டி.கே. சிவகுமாரின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறேம். ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கும்போது, எப்போது முதலமைச்சர் ஆக போகிறீர்கள் என்று கேட்பேன். கேக்கில் டி.கே. சிவகுமார் பெயருக்கு சி.எம். என்று எழுத நாங்களும் காத்திருக்கிறோம். சித்தராமையா ஏற்கனவே முதலமைச்சராக பதவி வகித்துவிட்டதால், இந்த முறை எங்கள் தலைவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்” என்றார்.