கர்நாடகா தேர்தல் முடிவுகள்:


கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதேநேரம் ஆளுங்கட்சியான பாஜக வெறும் 66 இடங்களை மட்டும் கைப்பற்றி ஆட்சியை இழந்தது. கடந்த தேர்தலில் 104 இடங்களை கைப்பற்றிய நிலையில்,  இந்த முறை அது இரட்டை இலக்கங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை:


இந்த தோல்வியால் தென்னிந்தியாவில் இருந்து பாஜக முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவிற்கு கிடைத்த இந்த தோல்வி எதிர்கட்சிகளுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் பெற்றுள்ளனர்.


எது எப்படி இருந்தாலும் பாஜகவின் ஓட்டு சதவிகிதம் சற்றும் குறையவில்லை. கடந்த முறை பெற்ற 36 சதவிகித ஓட்டுக்கள் அப்படியே கிடைத்துள்ளன. அப்புறம் எப்படி காங்கிரஸ் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை 5 சதவிகித ஓட்டுக்கள் அதிகப்படியாக வாங்கியது என்ற கேள்வி எழலாம். அது பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்த மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் ஓட்டு சதவிகிதமாகும். ஆம், பெரிதாக கொள்கைகள் எதுவும் இல்லாமல், பதவி கொடுத்தால் போதும் பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி யார் பக்கம் வேண்டுமானாலும் தாவுவோம் என காத்திருந்த குமாரசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய சவுக்கு அடி. 


கடந்த முறையைவிட இந்த முறை மதசார்பற்ற ஜனதா தள கட்சி 5 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன. அது அப்படியே காங்கிரஸ்க்கு விழுந்துள்ளது.  இந்நிலையில், பாஜக பெற்ற தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதை இங்கு அறியலாம்.


இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்கள்:


பாஜக தலைமையிலான கர்நாடக அரசு கடந்த 3 ஆண்டுகளில் கொண்டு வந்த பல்வேறு சட்டங்கள் அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராகவே இருந்தது.  கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை, இஸ்லாமியர்களுக்கான 4 சதவிகித இடஒதுக்கீடு ரத்து, கட்டாய மதமாற்ற தடை சட்டம் மற்றும் பசுவதை தடுப்புச் சட்டம் என பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளனர். இது அந்த மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இடையே கடுமையான எதிர்ப்பை பெற்றது.


இது தோல்விக்கு காரணமாக அமைந்தாலும், இந்துக்கள் அதிகம் உள்ள வடக்கு பிராந்தியத்தில் பாஜகவிற்கு ஆறுதலை தந்தது. 


தோல்வியடைந்த இந்துத்துவா?


இந்துத்துவாவை முன்னிலைப்படுத்தியே பாஜகவினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். மாநிலத்தில் சில தரப்பினரின் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளான பஜ்ரங் தள் அமைப்பிற்கு தடை விதிக்கப்படும் என வாக்குறுதி அளித்தே காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. ஆனால், பாஜகவோ அந்த அமைப்பிற்கு தொடர்ந்து ஆதரவு அளித்தது. பிரதமர் மோடி பரப்புரையின் போது, ஜெய் பஜ்ரங் பலி  என முழக்கமிட்டுதான் பேச்சையே தொடங்கினார். எந்த அளவிற்கு தரையில் இறங்கி வேலைப்பார்க்க வேண்டுமோ அந்த அளவுக்கு மோடியும் அமித்ஷாவும் தங்களது வியூகங்களை அமைத்தனர்.


ஆனாலும், அந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியைதான் கண்டுள்ளது. மெஜாரிட்டியான மக்கள் இந்து என்பதை காரணம் காட்டி பாஜக இந்துத்துவாவை இறுக்கிப் பிடித்தாலும் அதிலும் நடுநிலையாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதையும் அவர்களின் வாக்குகள் சிதறும் என்பதையும் மோடியின் பாஜக கண்மூடித்தனமாக நம்ப மறுக்கிறது எனத் தெரிகிறது. 


ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு:


சில விஷயங்களில் கடும் பிடிவாதத்தனத்தினால் ஆளும் பாஜகவிற்கு எதிரான மனநிலை பொதுமக்களிடையே பரவலாக காணப்பட்டது என்பது வெட்டவெளிச்சமாக தெரியவருகிறது. அதன் விளைவுகளையே தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. 40 சதவிகிதம் அளவிற்கு கமிஷன் பெற்றதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் அம்பலமானதோடு விலைவாசி உயர்வும் தோல்விக்கு முக்கிய பங்காற்றியுள்ளன. 


உட்கட்சி பூசல்:


உட்கட்சி பூசலும் பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வழக்கமாக இந்த பிரச்சினை இருக்கக் கூடிய காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கூட்டாக சேர்ந்து திறம்பட இந்த தேர்தலை எதிர்கொண்டதாகவும், அதேநேரம் பாஜகவில் உள்ளூர் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லாததே இதற்கு காரணம் என பெயர் சொல்ல விரும்பாத பாஜக பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். 


அதுமட்டுமல்லாமல், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எடியூரப்பா வயதை மட்டுமே காரணம் காட்டி ஓரம்கட்டப்பட்டார். இதன்மூலம் பாஜக பாரபட்சம் பார்ப்பதில்லை என்ற நல்ல எண்ணம் மக்கள் மத்தியில் எழும் என பாஜக நினைத்தது. ஆனால் அது பெரிதும் கை கொடுக்கவில்லை. அவற்றில் பெரும்பாலானவை கைக்கு வாக்குகளாக மாறின. அதிருப்தியில் இருந்த எடியூரப்பாவே சில வேலைபாடுகளை பார்த்திருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை எனக் கூறப்படுகிறது. 


வலிமையான காங்கிரஸ்:


பாஜகவின் எந்தவொரு நகர்வையும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான சிவக்குமார் உடனடியாக எதிர்கொண்டு பதிலடி தந்தார். தேர்தலுக்கு முன் நடந்த கருத்து கணிப்பின் போது பொம்மையை காட்டிலும் சித்தராமையாவையே முதலமைச்சராக ஏற்க தயார் என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இது பசவராஜ் பொம்மையை மக்கள் விரும்பவில்லை என்பதையே காட்டியது என சொல்லப்பட்டது. 


இதோடு ராகுலை மோடிக்கு எதிரான தலைவராக நிறுத்தி எதிர்க்கட்சிகளோடு பேச காங்கிரஸ்க்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தலைமைக்கு கர்நாடக தேர்தல் மூலம் காங்கிரஸுக்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. நம்பிக்கையோடும் புத்துணர்ச்சியோடும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் முன்னெடுக்கலாம் என்பதில் எந்த தயக்கமும் இல்லை.  


இந்த தேர்தலில் ராகுலின் பங்களிப்பை பற்றி பேசியே ஆக வேண்டும். அவர் பாதயாத்திரை வியூகம் ஒருபக்கம் என்றால் அவருக்கு ஏற்பட்ட இன்னல்கள் மறுபக்கம் உதவியுள்ளது என்றே கூறலாம். ஆட்சியை வைத்துக்கொண்டு கருத்துக்களை கருத்துக்களால் மோதாமல் அதிகாரத்தால் பாஜக கையாண்ட விதம் மக்களை கடுப்பேற்றியுள்ளது. 


ராகுல்காந்தியை சிறைக்கு அனுப்ப முடிவெடுத்தது, எம்.பி. பதவியை பிடுங்கியது, வீட்டை பிடுங்கி தெருவுக்கு அனுப்பியது என ராகுல் மீதான அனுதாபங்கள் ஏராளம்... இவை அனைத்தும் மோடி மீதான எதிர்ப்பை காட்டவே வழிவகுத்தது. இந்த விஷயத்தில் எந்த மாதிரியான அரசியல் வீயூகத்தை மோடி பயன்படுத்த நினைத்தார் என்பது புலப்படவில்லை.  


தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?


இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பாஜக தோல்வியுற்று இருந்தாலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என்றால் அது சந்தேகம் தான். உள்ளூர் பிரச்சினைகள் என்பதும் தேசிய அரசியல் என்பதும் வேறு. அதேநேரம், இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிர்ப்பு மற்றும் தீவிர இந்துத்துவா ஆகியவை தொடர்ந்து பாஜகவிற்கு வெற்றியை தராது என்பதையும், எதிர்க்கட்சிகள் தீர்க்கமாக இணைந்து போராடினால் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையையும் கர்நாடகா தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.


எது எப்படியோ, இந்த தேர்தல் மூலம் சில விடாப்பிடித்தன கொள்கைகளுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்து, மறுபரிசீலனை செய்து சீர்திருத்தம் செய்தால் கட்சியும் ஆட்சியும் நீடிக்கும். இல்லையென்றால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வரை கொண்டாடிவிட்டு பின்னர் ஆட்டம் காண வேண்டிய நிலைதான் இருக்கும். 


மோடிக்கு கிடைத்த தோல்வியாக இந்த தேர்தல் கருதப்பட்டாலும், அப்படியெல்லாம் இல்லை... இது மோடிக்கான எதிர்ப்பு அலை இல்லை. மாநில அரசின் தவறுகளே தோல்விக்கு காரணம் என்று சில ஊடகங்கள் காட்ட முயற்சிக்கின்றன. அப்படியென்றால் மோடி ரோடு ஷோ நடத்தியதெல்லாம் வீணாய் போன காரணம் என்ன கோபால்... என்று கேட்பதை தவிர வேறுவழியில்லை.