இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் தென்பட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Continues below advertisement

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா:

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா, கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை திருப்பிப்போட்டது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இருப்பினும், கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே 26ஆம் தேதி வரை, கொரோனாவால் 1,010 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய (மே 30) நிலவரப்படி 2,710 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

"குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்"

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பையும் கொரோனா சூழலையும் கருத்தில் கொண்டு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் தென்பட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையில், "பள்ளிக் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் காணப்பட்டால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம், மருத்துவரின் ஆலோசனையின்படி தகுந்த சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும்.

காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகளுடன் குழந்தைகள் பள்ளிக்கு வந்தால், அவர்களின் பெற்றோருக்குத் தெரிவித்துவிட்டு வீட்டிற்கு அனுப்புங்கள் என பள்ளிகளுக்கு வலியுறுத்தப்படுகிறது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களிடையே இந்த அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட வேண்டும்.

ஒட்டுமொத்தமாக, பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியத்தின் நலனுக்காக கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாதம் 26ஆம் தேதி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கொரோனா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பள்ளிகள் பின்பற்ற வேண்டிய கொரோனா நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நிலவரப்படி, கர்நாடகாவில் 234 பேருக்கு கோவிட் தொற்று பதிவாகியுள்ளன. ஜனவரி 1 முதல், நோய்த்தொற்று உள்ள மூன்று நோயாளிகள் இறந்துள்ளனர். அவர்கள் இணை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.