கர்நாடகாவில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் எலிகள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவமும், அதற்கு போலீசார் எடுத்த நடவடிக்கையும் மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 


பொதுவாக ஒவ்வொரு உயிரினங்களாலும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தொல்லை ஏற்படும். அதில் எலிகளை பற்றி சொல்லவே வேண்டாம். நன்றாக இருக்கும் வீட்டைப் பிரித்து பதம் பார்ப்பதில் எலிகள் தனி ரகம். பேப்பர் தாள் முதல் வீட்டில் உள்ள பொருட்கள் வரை நாசம் செய்து வைத்திருக்கும். அதனை கட்டுப்படுத்த சில வீடுகளில் பூனைகள் வளர்க்கப்படுவது வழக்கம். அதேசமயம் எலிகளை கொல்ல மருத்து போன்றவையும் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. 


இதனிடையே கர்நாடகாவில் உள்ள கௌரிபிதனூர் கிராமப்புற காவல் நிலைய வளாகத்தில் இரண்டு பூனைகள் வளர்க்கப்படுகிறது. போலீஸ் ஸ்டேஷனில் எதற்கு பூனைகள் என மக்கள் குழம்பிய நிலையில், அதற்கான காரணத்தை கௌரிபிதனூர் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜய் குமார் விளக்கியுள்ளார். அதாவது பெங்களூரில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த போலீஸ் ஸ்டேஷன் கடந்த  2014 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.


இதற்கு அருகில் ஏரி உள்ள நிலையில், அங்கு உலவும் எலிகள் தங்குவதற்கு சிறந்த இடமாக தங்களது போலீஸ் ஸ்டேஷன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் எலிகளால் முக்கியமான கோப்புகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், அதனால் பூனைகளைப் பயன்படுத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டியிருப்பதாகவும் விஜய் குமார் கூறியுள்ளார். இதனையடுத்து முதலில் ஒரு பூனையை விலைக்கு வாங்கி ஸ்டேஷனில் வளர்த்துள்ளனர். இதனால் எலிகளின் தொல்லை குறைந்துள்ளதால் இரண்டாவதாக மற்றொரு பூனையும் வாங்கப்பட்டுள்ளது. 


இதுவரை 3 எலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 பூனைகளும் காவல் நிலையத்தில் ஒரு குடும்ப உறுப்பினர்களாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள பல துறைகள் எலி மற்றும் கொசு தொல்லையை தடுக்க ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகா தேர்வுகள் ஆணையம் எலி மற்றும் கொசு தொல்லையைத் தடுக்க ஆண்டுக்கு சுமார் 50,000 ரூபாய் செலவழிப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலாக கிடைத்துள்ளது. இதேபோல் 2010-2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் எலிகளைப் பிடிப்பதற்காக மாநில அரசு ரூ.19.34 லட்சத்தைச் செலவிட்டது  குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண