ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மகன் 12ம் வகுப்பில் 600க்கு 592 மதிப்பெண் பெற்ற மதிப்பெண் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஆட்டோ ஓட்டுநரின் பெருமிதம்:


விகாஸ் அரோரா என்ற நபர் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் ஒரு மதிப்பெண் பட்டியலை பகிர்ந்துள்ளார். அதில், “மஹாராஸ்டிராவின் அகோலாவில் இன்று ஆட்டோவில் பயணம் செய்தபோது அந்த ஆட்டோ ஓட்டுநர், இந்த மதிப்பெண்களைப் பாருங்கள்.. அவனுக்கு மிகச்சிறந்த மூளை இருக்கிறது என்று கூறி தனது மகனின் மதிப்பெண் பட்டியலை மிகுந்த மகிழ்ச்சியுடன் காட்டினார். தன் மகனின் சாதனையை காட்டியபோது மிகவும் பெருமையாக உணர்ந்தார்” என்று கூறியுள்ளார்.




600க்கு 592 மதிப்பெண்கள்:


சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில் மஹாராஸ்டிராவின் அமராவதி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகனான  கருட் சச்சின் பாலு என்ற 12ம் வகுப்பு மாணவன் 600க்கு 592 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அதில் ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்களும், கணிதத்தில் 100, இயற்பியலில் 100, வேதியியலில் 98, உயிரியலில் 99, தகவல் தொழில்நுட்பத்தில் 98 மதிப்பெண்கள் என்று மொத்தம் 592 மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.


தன் மகனின் இந்த சாதனையை தான் தனது பயணிகள் அனைவரிடமும் பெருமையுடன் காட்டி மகிழ்ந்துள்ளார் அந்த மாணவனின் தந்தை. விகாஷ் அரோராவின் லிங்க்ட் இன் பதிவில் நிறைய பேர் அந்த மாணவனுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். அந்த பதிவில் கமெண்ட் செய்துள்ள ஒருவர், “அந்த மாணவனுக்குப் பாராட்டுகள். அவனது உயர்கல்விக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தெரியப்படுத்தவும்” என்று கூறியுள்ளார்.




தற்போதைய நிலையில் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்பதே சவாலாகியுள்ள சூழ்நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் மகன் தனது கடினமான சூழ்நிலையிலும் படித்து இந்த அளவிற்கு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கொரோனா காலத்தில் மாணவர்களின் படிப்பு முடங்கியிருந்த நிலையில், இந்த ஆண்டு தான் மாணவர்களின் கல்வி சீரானது. இந்த சூழ்நிலையிலும் படித்து இந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அனைவருக்கும் கல்வி தான் ஆயுதம். கல்வி மட்டுமே ஒருவரது நிலையை உயர்த்தும் என்பதை உணர்ந்து அந்த மாணவன் படித்திருப்பதும், கல்வியை விட சிறந்த செல்வம் வேறு ஏதும் இல்லை என்பதை உணர்ந்து, தான் ஆட்டோ ஓட்டினாலும் தன் மகனை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருக்கும் தந்தையின் நம்பிக்கையை காப்பாற்றியிருப்பதும் பாராட்டுக்குரியது.


வைரலாகும் மதிப்பெண் பட்டியல்:


விகாஷ் பகிர்ந்துள்ள லிங்க்ட் இன் பதிவு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளதோடு, அந்த மாணவனின் மதிப்பெண் பட்டியல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.