பெல்லாரி மாவட்டம் சிர்வார் கிராமத்தில் ஏரியில் மூழ்கி இறந்த சிறுவனின் பெற்றோர், தனது மகன் மீண்டும் உயிர் பெற வேண்டும் என்ற நம்பிக்கையில், அவரது உடலை உப்புக் குவியல்களில் வைத்து காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கர்நாடகா பெல்லாரி அருகே சுரேஷ் என்ற சிறுவர், சிராவர் கிராமத்தில் உள்ள ஏரியில் மூழ்கி உயிரிழக்கவே, உப்பு குவியலில் சடலத்தை வைத்தால் உயிர்த்தெழுந்து, திரும்பி வருவான் என ஒருவர் கூற, அதை அப்படியே நம்பி குடும்பத்தினர் அடக்கம் செய்யாமல் உப்பு குவியலில் குவித்து காத்திருந்துள்ளனர். 10 வயதான சுரேஷ்  என்ற சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏரியில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தான். குடும்பமும் மற்ற கிராம மக்களும் எதார்த்தமாக வாட்ஸ் அப் பக்கத்தில் ஒரு செய்தியை கண்டுள்ளனர். அதில் நீரில் மூழ்கியவரின் உடலை நான்கு முதல் ஐந்து மணி நேரம் உப்பில் அடைத்து வைத்தால், அந்த நபர் உயிருடன் திரும்பி வருவார் என்று இருந்தது. இதையும் நம்பிய சிறுவனின் குடும்பத்தார் உப்பை வாங்கி அதில் உடலை வைத்து காத்திருந்துள்ளனர். 


சிறுவன் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் உப்பில் மூடப்பட்டிருந்தான். சிறுவன் மீண்டும் உயிர் பெறுவான் என்ற நம்பிக்கையில் பெற்றோரும் கிராம மக்களும் சடலத்தை சுற்றி ஆவலுடன் காத்திருந்தனர். உள்ளூர் மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்ததை அடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு கல்லறையில் தகனம் செய்தனர். இதுகுறித்து சிறுவனின் உறவினர் திப்பேசுவாமி ரெட்டி கூறுகையில், “சமீபத்தில் சமூக வலைதளப் பதிவைப் பார்த்த பெற்றோர்கள், சுரேஷை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற ஆசையில், அந்த வாட்ஸ் அப் செய்தியை  பின்பற்றினர். இதையடுத்து நாங்கள் சுமார் 10 கிலோ உப்பு வாங்கி, உடலை அதை சுற்றி பேக் செய்து, சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்தோம், ஆனால் எதுவும் நடக்கவில்லை.


சில கிராம மக்கள் காவல்துறை மற்றும் மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தனர், உடனடியாக அவர்கள் எங்கள் கிராமத்திற்கு சென்று சிறுவன் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். பின்னர், சிறுவன் உடல் எங்கள் கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.