கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக அளவிலான மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய போதும், தேர்ச்சியில் தமிழகம் பின்தங்கி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.
நீட் தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 99,610 பேர் நீட் தேர்வு எழுதி, 57,215 பேர் தேர்ச்சிபெற்றனர். அதாவது 2021-ல் 57.43 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருந்த நிலையில் 2022-ல் 51.28% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு 1,32,167 பேர் தேர்வு எழுதி, அதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
தமிழ் வழியில் தேர்வு எழுதியோர்
கடந்த 2019ம் ஆண்டில் தமிழில் தேர்வு எழுத 1,017 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். 2020ஆம் ஆண்டு 17,101 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2021-ல் 19,868 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 965 ஆக அதிகரித்தது.
ஒட்டுமொத்தமாக நீட் இளங்கலைத் தேர்வுகளை 17.64 லட்சம் பேர் எழுதியதில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்ச்சி விகிதம் 56.3% ஆக உள்ளது. ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.
முதல் 50 இடங்கள்
நீட் தேர்வு முடிவுகளில் ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவி தனிஷ்கா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் நீட் தேர்வில் 720-க்கு 715 மதிப்பெண்கள் (99.99 Percentile) எடுத்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த மாணவர் வத்ஸா ஆஷிஸ் பத்ரா 2ஆவது இடத்தைப் பிடித்தார். இவரும் அதே மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தை கர்நாடகாவைச் சேர்ந்த ஹ்ரிஷிகேஷ் என்ற மாணவர் பெற்றுள்ளார். இவரும் 720-க்கு 715 மதிப்பெண்கள் (99.99 Percentile) எடுத்துள்ளார்.
நீட் தேர்வில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 160 மாணவர்களும், 5 லட்சத்து 63 ஆயிரத்து 902 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். 30ஆவது இடத்தை த்ரிதேவ் விநாயகா என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர் 720-க்கு 705 மதிப்பெண்கள் (99.99 Percentile) எடுத்துள்ளார். அடுத்ததாக 43 இடத்தை ஹரிணி என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் 702 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.