காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதை நேற்று கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 


இந்நிலையில் இன்று முதல் ராகுல் காந்தி தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இன்று காலை 7 மணிக்கு விவேகானந்தர் கல்லூரி மைதானத்திலிருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் அவர் பாதயாத்திரை மேற்கொள்கிறார். சுசீந்திரத்தில் இருந்து களியக்காவிளைக்கு சுமார் 65 கிலோ மீட்டர் தூரம் எனவே 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. களியக்காவிளையில் இருந்து கேரள மாநிலத்திற்கு பாத யாத்திரை செல்கிறார்.






பின்னர் அவரது தொகுதி யான வயநாட்டிலும் பாத யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 11ஆம் தேதியிலிருந்து ராகுல் காந்தி கேரளா மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். அங்கு 18 நாட்கள் தங்கி பாதயாத்திரை செல்கிறார்.அதன்பின்னர் கர்நாடகா மாநிலம் சென்று 21 நாட்கள் பாத யாத்திரையை தொடர்கிறார். இதைத் தொடர்ந்து ஆந்திரா, வட மாநிலங்களுக்கு இவர் யாத்திரை பயணத்தை தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மொத்தமாக 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த பாத யாத்திரையில் ராகுல் காந்தி சுமார் 1 கோடி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். கன்னியகுமரி மாவட்டத்தில் அவர் சுமார் 1 லட்சம் மக்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 






மத்திய பாஜக அரசின் தவறான அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் விலைவாசி ஏற்றம், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றை விளக்கி கூறும் விதமாகவும் நாடு முழுவதும் ராகுல் காந்தி பாதயாத்திரை திட்டமிட்டார்.அந்த வகையில் இந்த மாபெரும் பாத யாத்திரையை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்குகினார்.


நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல் காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்கள் உடன் உரையாற்றினார். அப்போது மத்திய பாஜக அரசு தொடர்பாகவும், அதன் கொள்கைகள் தொடர்பாகவும் விமர்சனம் செய்து பேசினார்.