இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பாக, வடக்கு கர்நாடக மாவட்டமான பகல்கோட்டின் சின்னச்சிறிய கிராமமான கடகேரியில் இருந்து, வேலையைத் தேடி கர்நாடகாவின் உடுப்பியில் கடற்கரைப் பகுதிக்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள்தான் பீமவ்வாவும், அவரது கணவரும். பிறந்து வளர்ந்து, நேசித்த கிராமத்திலேயே பீமவ்வாவுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருந்திருக்கிறது. தலைவிரித்தாடிய பஞ்சம் பீமவ்வாவையும், அவரது கணவரையும் புரட்டிப்போட்டிருக்கிறது. இடம் மாறிப்போனால் நமக்கான தேவைகள் தீரலாம் என்னும் நம்பிக்கையுடம் உடுப்பிக்கு வந்திருக்கிறார்கள் இருவரும்.
இந்தக் கதையை நாம் கேட்கும் இந்த நாளில், பீமவ்வாவின் வயது 48. இன்று அவர் உடுப்பியின் தள்ளூர் கிராமப் பஞ்சாயத்துக்கு பிரெசிடெண்ட். அப்பகுதி மக்களின் அன்றாடப் பாடுகளையும், அல்லலையும் பார்த்து, தானே வரிந்து கடமைகளைத் தன் தலையின் மீது கட்டிக்கொண்ட அன்புக்குக் கிடைத்த சிம்மாசனம் இது..
தள்ளூர் பஞ்சாயத்தில் பீமவ்வாவை எல்லோருக்கும் தெரியவந்தது. தங்களுக்காக நடையாய் நடந்த கால்களை இனம் கண்டுகொண்டார்கள் அவர்கள். குண்டப்பூர் தாலுக்கா பஞ்சாயத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் கருண் பூஜாரி என்பவருக்கு பீமவ்வாவைத் தெரியவந்திருக்கிறது. டிசம்பர் மாதம் 2020-ஆம் ஆண்டு பீமவ்வாவை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட ஊக்கமளித்திருக்கிறார் அவர்.
பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பிரெசிடெண்ட் பொறுப்பு, போட்டியிட்ட முதல்முறையே வென்றிருக்கிறார் பீமவ்வா. மக்களின் துயரங்களுக்காக உழைத்த பீமவ்வாவுக்கு பீடங்களின் மீதும், நாற்காலிகளின் மீதும் விருப்பமிருந்திருக்க வாய்ப்பில்லை. எப்படியும், அதுதானே அவரின் இடம். அவர்தானே பொறுப்புகளுக்கும், பொறுப்புகள் தரும் பட்டங்களுக்கும் சொந்தமானவர்..
பீமவ்வாவின் வாழ்வு அப்படியேதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ” ஒவ்வொரு நாளும் என் மக்கள் அனுபவிக்கிற கஷ்டங்களுக்கு ஏதாச்சு ஒரு வழியில உதவணும்னு நினைக்கிறேன். ரேஷன் கார்டு வாங்குறதோ, அரசுத்திட்டத்துல பலன்களை வாங்குறதோ, எதோ ஒரு உதவி..” என்கிறார். மக்களின் கஷ்டங்களை தனது கணக்கில் எழுதிக்கொள்ளும் இந்த மேதையின் பள்ளிப்படிப்பு இரண்டாம் வகுப்பு வரை மட்டும்தான்.
” நான் கூலி வேலைக்குத்தான் போய்க்கிட்டு இருக்கேன். காலையில எழுந்து மதியம் வரைக்கும் ஜனங்களுக்கான வேலைகளைச் செஞ்சுட்டு, மதியம் வேலைக்குப் போவேன். முழு நாளும் வேலைக்குப் போனா எனக்கு 500 ரூபாய் கூலி கிடைக்கும்..” தன்னைப் பற்றி கேட்பவர்களுக்கு இப்படித்தான் பதிலளித்தாராம் பீமவ்வா, ஆதுரத்துடன்..
பீமவ்வாவுக்கும், அவரது கணவர் மாரியப்பாவுக்கும் நான்கு பிள்ளைகள். ஒரு மகன் இந்திய-சீன எல்லைப்படையில் இருக்கிறார். இன்னொருவர் பூர்விக கிராமத்தில் தொழிலாளி. மற்ற இருவரும் படிக்கிறார்கள். பிள்ளைகள் படிப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதில்தான், நாளின் களைப்பெல்லாம் கலைவதாய் சொல்லியிருக்கிறார் பீமவ்வா..
ஒருநாள் பீமவ்வாவைச் சந்திக்கப்போகலாம்..
நன்றி : Indian Express