நாட்டில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவது, நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.31) கூறியுள்ளது விவாதங்களைக் கிளப்பியுள்ளது. 


2022- 23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை (பிப்.1) டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி பட்ஜெட் கூட்டத் தொடர், இன்று நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அதையொட்டி பிரதமர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, ''நாட்டில் அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பாதிப்பது உண்மை'' என்று தெரிவித்தார். பிரதமர் மோடி இப்படிப் பேசுவது இது முதல்முறை அல்ல. 2016 முதலே பிரதமர் ஒரே நாடு- ஒரே தேர்தல் திட்டத்தை வலியுறுத்திப் பேசி வருகிறார். 


மக்களவைத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டமே ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டமாகும். இந்த யோசனையை மத்தியில் ஆளும் பாஜக அரசு, தொடர்ந்து முன்வைத்து வருகிறது. பாஜக தனது தேர்தல் வாக்குறுதியிலும் இந்தத் திட்டத்தை முன் மொழிந்திருந்தது. 


பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தத் திட்டம் குறித்துப் பேசிவருகின்றனர். இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் மக்களின் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில், மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. 




அதேபோல தேசிய வாக்காளர் தினத்தன்று  (ஜனவரி 25ஆம் தேதி) பாஜக தொண்டர்களுடன் பேசிய மோடி, தொடர்ச்சியான தேர்தல் சுழற்சியின் காரணமாக எல்லாவற்றிலும் அரசியல் காணப்படுகிறது.


வாக்காளர்களின் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்பதற்காக அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும். ஒரு தேசம், ஒரே தேர்தல் மற்றும் ஒரு நாடு, ஒரு வாக்காளர் பட்டியல் என்ற விவாதத்திற்கு நாம் தயாராக வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் நாட்டில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவது, நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.31) கூறியுள்ளது விவாதங்களைக் கிளப்பியுள்ளது. 


ஒரே நாடு ஒரே தேர்தல்


இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள், ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் வாக்களிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மத்திய அரசைத் தேர்ந்தெடுக்க மக்களவைத் தேர்தலும் மாநில அரசுகளைத் தேர்ந்தெடுக்க சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்படுகின்றன. இதேபோல உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தனியாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. சுதந்திரம் பெற்றது முதல் இரண்டு தேர்தல்களும் ஒரேசேர நடைபெற்றன. 




5 ஆண்டுகள் இடைவெளியில் 1952, 1957, 1962 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளுக்கான தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடைபெற்றன. 1968இல் சில மாநில சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. இதனால், தேர்தல் முறை மாற்றம் கண்டது. தற்போது ஆண்டு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. 


இந்த நிலையில்தான் பாஜக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று அறிவித்து வருகிறது. தேர்தல் சமயத்தில் புதிய மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்கத் தேர்தல் ஆணையம் தடை விதிப்பதால், வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்கள் பாதிக்கப்படுவதாக பாஜக குற்றம்சாட்டுகிறது.


செலவுகள் குறையும்


மேலும் சில காரணிகளையும் பாஜக சுட்டிக்காட்டுகிறது. தேர்தல்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருப்பதால், செலவினங்கள் அதிகரிப்பதாகவும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி முடிப்பதன் மூலம் அரசின் செலவுகள் குறையும் என்னும் வாதத்தையும் பாஜக முன்வைக்கிறது. 


5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்கள் ஒரே சமயத்தில் வந்தால், மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள். வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கும். இதன்மூலம் அரசைத் தேர்ந்தெடுப்பதில் பெருவாரியான மக்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படும் என்றும் பாஜக கூறுகிறது. 




எதிர்க்கும் எதிர்க் கட்சிகள் 


எனினும் இந்தத் திட்டத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின்மூலம் 'ஒரே மக்கள், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு' என்ற வரிசையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை பாஜக கையில் எடுப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.


அதேபோல ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் பெரும்பாலும் ஒரே கட்சியே ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதைக் கடந்தகால வரலாறுகள் உறுதி செய்துள்ளன. இதனால், மாநிலக் கட்சிகளின் இருப்பும் முக்கியத்துவமும் காலப்போக்கில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மாநில சட்டப்பேரவை கலைக்கப்படும் சூழலில், மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதேபோல மத்தியில் உள்ள கூட்டணி கவிழ்ந்து, ஆட்சி கலைக்கப்பட்டால், மாநில அரசுகளைத் தேர்ந்தெடுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் மீண்டும் நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதனால் கூட்டாட்சித் தத்துவம் கேள்விக்குள்ளாகும் என்கின்றனர்.


இதுகுறித்து ஏபிபி நாடுவிடம் பேசினார் பத்திரிகையாளர் லட்சுமி ராமசுப்பிரமணியம். 


''எல்லோரையும், எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று பாஜக நினைப்பதன் வெளிப்பாடே இந்தத் திட்டம். முன்பெல்லாம் காங்கிரஸ் முக்த் பாரத் (காங்கிரஸ் இல்லாத இந்தியா) என்பதுதான் பாஜகவின் பிரச்சாரமாக இருந்தது. இப்போது ஹிந்து ராஷ்டிராவே (இந்துக்களுக்கான நாடு) அதன் இலக்காக உள்ளது. அதைச் செயல்படுத்தவும், நாட்டைக் காவிமயமாக்கவுமே ஒரே நேரத்தில் தேர்தல் என்கிறது பாஜக. எனினும் இந்தத் திட்டம் வெற்றிபெறச் சாத்தியம் குறைவாகவே உள்ளது.


இந்திய ஜனநாயகத்துக்கோ அரசியலமைப்புக்கோ ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சரிவராது. இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலங்களுக்கெனத் தனித்தனி தேர்தல் தேவைகள், நடைமுறைகள் உள்ளன. 




1999-ல் 15வது இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி, தேர்தல் விதிகளில் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தார். அதில் நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தலாம் என்று ரெட்டி கூறியிருந்தார். எனினும் அந்த அம்சங்கள் அமலுக்கு வரவில்லை. 


செலவுகள் குறையும் என்று பாஜக வாதிட்டாலும் மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையான இவிஎம் இயந்திரங்களும் மனிதவளமும் இங்கு உள்ளதா என்று கேள்வி எழுகிறது. அதேபோல, மேலே குறிப்பிட்ட 3 அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதில், மக்களுக்குக் குழப்பமே ஏற்படும். 


அதேபோல இதன்மூலம், நாடாளுமன்றத்தின் காலகட்டம் முடியும்போது நாட்டில் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் 5 ஆண்டுகள் நிறைவடையாமலேயே சட்டப்பேரவைகள் கலைக்கப்படலாம். இதனால் பாஜக தனக்குச் சாதகமான அரசியல் சூழலை உருவாக்கிக்கொள்ள முடியும்.


ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் தேசியக் கட்சிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. இந்தத் திட்டம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலேயே பாஜக இதை முழுமூச்சுடன் ஆதரிக்கிறது.


ஒரு திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவித்தால், அதை முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் நாளுக்குநாள் வேகமாக பாஜகவினர் செயல்படுகின்றனர். அவர்கள் ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தால், அதை முடிக்காமல் விடமாட்டார்கள். எனவே ஒரே நாடு ஒரு தேர்தல் திட்டத்தை மக்கள் போராட்டத்தைத் துணையாகக் கொண்டு, எதிர்க் கட்சிகள் ஒருமித்த குரலில் எதிர்க்கவேண்டும். இல்லையெனில் அத்திட்டம் நம்முடைய ஜனநாயகத் தன்மையையே குலைத்துவிடும்''. 


இவ்வாறு லட்சுமி ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.