Karnataka Money Seized : கர்நாடகாவில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணம் பறிமுதல்
கர்நாடக சட்டப்சபை தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கர்நாடகா பெலகாவி மாவட்டம் ராமதுர்கா என்ற பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூருவில் உள்ள சிட்டி மார்க்கெட் பகுதியில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நெருக்கும் நிலையில், இதுபோன்ற பணம் பறிமுதல் செய்யப்படுவது பெரும் பரபரப்பை கிளிப்பியுள்ளது.
கர்நாடக தேர்தல் எப்போது?
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10 தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒருவர் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ், பாஜக கட்சிகள் சார்பில் இரண்டு கட்ட வேர்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் மொத்தம் 166 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.