மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் தனது உரையில், முன்னாள் பிரதமர், சமூக நீதி காவலர், இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகன் மறைந்த வி.பி.சிங்கிற்கு இந்த திராவிட மாடல் அரசு மரியாதை செய்ய நினைக்கும் அறிவிப்பை விதி எண் 110 கீழ் வெளியிடுகிறேன். உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் மிகப்பெரிய ஜமீன் குடும்பத்தில் பிறந்த வி.பி.சிங் தனது கல்லூரி காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார். பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தந்து நிலங்களையே தானமாக வழங்கினார்.
1969 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் நின்று வென்றார். அம்மாநில முதலமைச்சர், மத்திய வர்த்தக அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். தேசிய முன்னணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ஆனார். வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான். ஆனாலும் அவரது சாதனைகள் மகத்தானது.
அதனால் தான் அவரை இந்த மன்றத்தில் போற்றிக் கொண்டு இக்ருக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஆனால் B.P. மண்டல் பரிந்துரையின் பேரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர் வி.பி.சிங் . மனிதனுக்கு சாவை விட மிகக் கொடுமையானது அவமானம். அந்த அவமானத்தைத் துடைக்கும் மருந்துதான் பெரியாரின் சுயமரியாதை என்று சொன்னவர் வி.பி.சிங் .
அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையோ, ஏழை, எளிய குடும்பத்தையோ சேர்ந்தவர் இல்லை. ஆனாலும் அதை செய்து காட்டியவர் வி.பி.சிங். பதவியில் இருந்த 11 மாத காலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான தொடக்கப்புள்ளி, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான தொடக்க புள்ளி, வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது, தேர்தல் சீர்திருத்தங்கள், தேசிய பாதுகாப்புக் குழு, உழவர்கள் பிரச்சினையை தீர்க்க 3 குழுக்கள் உள்ளிட்ட அனைத்தையும் செய்து காட்டிய சாதனையாளர் வி.பி.சிங் தான்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை சகோதரர் போல நினைத்தவர். தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் நிறைந்த இடமாக வி.பி.சிங் நினைத்தார். அவர் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, முன்னேற்றத்தில் மிகப்பெரிய அக்கறை கொண்டிருந்தார். அவரின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு சென்னையில் வி.பி.சிங்கின் முழு உருவ சிலை அமைக்கப்படும் என தெரிவித்தார்.